Headlines

குப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சீரமைக்கப்பட்ட வகுப்பறைத் திறப்பு: நூற்றாண்டு விழாவில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மனிஷ் நாரணவரே உரை!

குப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சீரமைக்கப்பட்ட வகுப்பறைத் திறப்பு: நூற்றாண்டு விழாவில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மனிஷ் நாரணவரே உரை!

மடத்துக்குளம்:

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம், குப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியின் கீழ் ரூ.3 லட்சம் மதிப்பில் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்த வகுப்பறை கட்டிடத்தைத் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மனிஷ் நாரணவரே திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பள்ளியின் நூற்றாண்டு விழாவில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மனிஷ் நாரணவரே கலந்துகொண்டு பேசியதாவது:
“குப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தனது 100-வது ஆண்டைக் கொண்டாடுவது மிகுந்த பெருமைக்குரிய நிகழ்வாகும். ரூ.3 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்ட வகுப்பறை தற்போது மாணவர்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஆத்தூர், கொழுமம், குப்பம்பாளையம், புதுநகரம், ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் இப்பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர்.

அரசுப் பள்ளிகள் சமத்துவமான கல்விக்கான வலுவான அடித்தளமாகத் திகழ்கின்றன. கல்வியுடன் திறன் மேம்பாடு, விளையாட்டு, கலை, அறிவியல் மற்றும் ஒழுக்கம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் மாணவர்கள் முன்னேற அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்றைய மாணவர்களே நாளைய இந்தியாவின் தலைவர்கள். புத்தக அறிவுடன் நல்ல பண்புகளையும், சமூகப் பொறுப்புணர்வையும் வளர்த்துக்கொண்டு, ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் மதித்து உயர்ந்த இலக்குடன் முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்.

100 ஆண்டுகள் என்பது ஒரு பள்ளியின் வயது மட்டுமல்ல; அது ஒரு சமூகத்தின் கல்விப் பயணம், பண்பாட்டு வளர்ச்சி மற்றும் தலைமுறைகளை உருவாக்கிய பெருமைமிக்க வரலாறாகும். இப்பள்ளியில் பயின்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து, சமூக வளர்ச்சிக்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் பங்களித்துள்ளனர். பள்ளியின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய முன்னாள் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களுக்கு என் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் காலை உணவுத் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், இலவச பாடப்புத்தகங்கள், சீருடைகள், ஸ்மார்ட் வகுப்பறைகள், இலவச மிதிவண்டி மற்றும் பேருந்து பயணச் சலுகை உள்ளிட்ட பல்வேறு மாணவர் நலத்திட்டங்களை முழுமையாகப் பயன்படுத்தி, மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி பெற்றோர், பள்ளி, சமூகம் மற்றும் நாட்டிற்குப் பெருமை சேர்க்க வேண்டும்.”

இந்நிகழ்ச்சியில் சங்கராமநல்லூர் பேரூராட்சித் தலைவர் மல்லிகா கருப்புசாமி, துணைத் தலைவர் பிரேமலதா, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அருள்ஜோதி, மடத்துக்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் கவிதா, வட்டாட்சியர் ரம்யா, வட்டாரக் கல்வி அலுவலர் பழனிசாமி, பேரூராட்சிச் செயல் அலுவலர் ஜீவா, பள்ளித் தலைமையாசிரியர் பொன்னுதாய், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தாமோதரன், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் திரளாகக் கலந்துகொண்டனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *