திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தையம் – பழனி நான்கு வழிச்சாலையில், மழைநீர் செல்லும் முக்கிய நீரோடையை தனியார் காற்றாலை நிறுவனம் ஒன்று மண் கொட்டி முற்றிலுமாக அடைத்து, சட்டவிரோதமாக பாதை அமைத்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தையம் பகுதியில் பழனி செல்லும் நான்கு வழிச்சாலையின் தென்புறம் அமைந்துள்ள நீரோடை, அப்பகுதியின் முக்கிய மழைநீர் வடிகாலாக உள்ளது. இந்த நீரோடையை தனியார் காற்றாலை நிறுவனம் மண் கொட்டி அடைத்து, கனரக வாகனங்கள் செல்ல பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இதனால் வரும் மழைக்காலங்களில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு சாலைகள் மற்றும் சுற்றியுள்ள விவசாய நிலங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் உள்ளது.

மேலும் உரிய அரசு ஆவணங்கள் மற்றும் அனுமதி இன்றி இந்த பாதை அமைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைக் கண்டித்து அப்பகுதி விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்து, சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
