பழனி : செப்டம்பர் 9,
பழனியில் திண்டுக்கல் மாவட்ட யோகா ஸ்போர்ட்ஸ் சங்கம், தமிழ்நாடு யோகா ஸ்போர்ட்ஸ் சங்கம் மற்றும் வாய்ஸ் ஆப் பழனி பவுண்டேஷன் ஆகியவை இணைந்து நடத்திய பள்ளி குழந்தைகளுக்கான சிறப்பு யோகாசன போட்டிகள் விமரிசையாக நடைபெற்றன.

இப்போட்டியில் திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு பள்ளிகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களது யோகா திறமைகளை வெளிப்படுத்தினர். 5 முதல் 15 வயது வரையிலான குழந்தைகள் பங்கேற்ற இப்போட்டியில் சூரிய நமஸ்காரம், பத்மாசனம், சிரசாசனம், அஞ்சராசனம், யோகமுத்திரா மற்றும் சோமாசனம் உள்ளிட்ட பல்வேறு கடினமான ஆசனங்களைச் செய்து அசத்தினர். சிறிய குழந்தைகள் தங்களது உடலை வில்லாக வளைத்து நெகிழ்வுத்தன்மையுடன் ஆசனங்களைச் செய்த காட்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
போட்டியின் முடிவில் திறமையை வெளிப்படுத்திய குழந்தைகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் கோப்பைகளும் வழங்கப்பட்டன. சிறுவயதிலிருந்தே குழந்தைகள் யோகாசனப் பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலேயே இப்போட்டி ஒருங்கிணைக்கப்பட்டது என்று அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் வாய்ஸ் ஆப் பழனி பவுண்டேஷன் கமலேஷ் பேசுகையில், தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் யோகாசனப் பயிற்சி அளிக்கத் தனி ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் யோகா பயிற்சிகளை முறைப்படி கற்றுக்கொண்டு இதுபோன்ற மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் அதிக அளவில் பங்கேற்பதை உறுதி செய்ய தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இணை ஆசிரியர் : நா.ராஜாமணி – 8973350663
