Headlines

டெங்கு அச்சத்தில் சிவகிரிபட்டி கிராமம்: தூர்வாரப்படாத சாக்கடைகளால் நோய் பரவும் அபாயம் – துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

டெங்கு அச்சத்தில் சிவகிரிபட்டி கிராமம்: தூர்வாரப்படாத சாக்கடைகளால் நோய் பரவும் அபாயம் – துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பழனி : ஆகஸ்ட் 31,

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள சிவகிரிபட்டி ஊராட்சியில் சரிவர சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்படாததால் அப்பகுதி மக்களிடையே நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. பாலசமுத்திரம் மருத்துவ நகர், பாண்டியன் நகர், சிவகிரிபட்டி, தட்டான்குளம், சேரன் ஜீவா நகர் மற்றும் திருநகர் ஆகிய பகுதிகளில் கழிவுநீர் செல்லும் பாதைகள் நீண்டகாலமாகத் தூர்வாரப்படாமல் முடங்கிக் கிடக்கின்றன.

சாக்கடைகள் முறையாகச் சுத்தம் செய்யப்படாததாலும், சுழற்சி முறையில் கொசுமருந்து அடிக்கப்படாததாலும், குடிநீர் சுத்திகரிப்பு செய்யப்படாமல் விநியோகிக்கப்படுவதாலும் அப்பகுதியில் கொசுக்களின் உற்பத்தி பெருமளவில் அதிகரித்துள்ளது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அடிக்கடி காய்ச்சல் மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு, பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் மலேரியா போன்ற கொடிய காய்ச்சல்கள் பரவி வரும் சூழலில், அனைத்து ஊராட்சிச் செயலாளர்களும் கழிவுநீர்க் கால்வாய்களைத் தூர்வாரி, பிளீச்சிங் பவுடர் மற்றும் கொசுமருந்துகளை முறையாகத் தெளிக்க வேண்டும் என சுகாதாரத்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும், சிவகிரிபட்டி ஊராட்சியில் இந்த வழிகாட்டுதல்கள் ஏதும் பின்பற்றப்படாமல் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து சிவகிரிபட்டி கிராம ஊராட்சி அலுவலரிடம் அப்பகுதி பொதுமக்கள் பலமுறை நேரில் சென்று மனுக்கள் அளித்தும், முறையிட்டும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஊராட்சிச் செயலாளரின் இந்த அலட்சியப் போக்கால் பொதுமக்களின், குறிப்பாகக் குழந்தைகளின் ஆரோக்கியம் தீவிர ஆபத்தில் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாகத் தலையிட்டு, கழிவுநீர்க் கால்வாய்களைத் தூர்வாரி, கொசுமருந்து தெளித்து, பாதுகாப்பான குடிநீர் வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தீவிர கோரிக்கை விடுத்துள்ளனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *