Headlines

புறாவிளை காணியின மக்களின் கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றப்படும் : சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு நடவடிக்கை: ஆட்சியர் உறுதி.

புறாவிளை காணியின மக்களின் கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றப்படும் : சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு நடவடிக்கை: ஆட்சியர் உறுதி.

கன்னியாகுமரி, செப். 5: கன்னியாகுமரி மாவட்டத்தின் கடைகோடி மலைவாழ் கிராமமான புறாவிளையில் வசிக்கும் காணியின மக்களின் நீண்டநாள் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மு. பிரதாப், இ.ஆ.ப., உறுதியளித்துள்ளார்.

திருவட்டார் வட்டம், திருவட்டார் ஊராட்சி ஒன்றியம் மற்றும் பொன்மனை பேரூராட்சிக்குட்பட்ட புறாவிளை பகுதிக்கு இன்று சென்ற மாவட்ட ஆட்சியர், மலைவாழ் காணியின மக்களை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார்.

சாலை, குடிநீர், சோலார் வசதி மற்றும் தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமல் இருப்பதாக மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தினார்.

மலைவாழ் மக்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், புறாவிளையைச் சேர்ந்த மலைத்தன்றல் மகளிர் சுயஉதவிக் குழுவுக்கு ரூ.4 லட்சமும், வில்லுசாமிமலை பகுதியைச் சேர்ந்த கிருஷ்ண துளசி மகளிர் சுயஉதவிக் குழுவுக்கு ரூ.2 லட்சமும் கடன் உதவி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

புறாவிளை மக்கள் அத்தியாவசியப் பொருட்களைப் பெற மணலோடையில் உள்ள நியாயவிலைக் கடைக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும், தங்கள் பகுதியில் பகுதிநேர நியாயவிலைக் கடை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கையை கூட்டுறவுத் துறை மற்றும் மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.

தொடர்ந்து மணலோடை பகுதியில் உள்ள மலைவாழ் மக்களையும் சந்தித்து, அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். மக்களுடன் கலந்துரையாடிய ஆட்சியர், அவர்களின் பாரம்பரிய நடன நிகழ்வைக் கண்டுகளித்ததுடன், பாரம்பரிய உணவையும் உண்டு மகிழ்ந்தார்.

பின்னர் பேச்சிப்பாறை ஊராட்சி, வலியலை பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) ர. மோனிகா, இ.ஆ.ப., உள்ளிட்ட அரசு அலுவலர்கள், மலைவாழ் காணியினப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *