கொடைக்கானல்:ஜூலை 21,
கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பூண்டி ஊராட்சியில் உள்ள பூண்டி மேலூர் பகுதியில் அமைக்கப்பட்ட மகளிர் கழிப்பறை வளாகம் பராமரிப்பின்றி வீணாகி வருவதாகவும், அதை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பூண்டி ஊராட்சியில் பதினாறாவது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ், ரூ. 81,000 மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகத்தின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், கட்டப்பட்ட நாளில் இருந்தே இந்தச் சுகாதார வளாகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
ஊராட்சி நிர்வாகம் சார்பில் இங்கு முறையான குடிநீர் மற்றும் தண்ணீர் வசதிகளை ஏற்படுத்தித் தராததால், பெண்கள் இதைப் பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. மேலும், தகுந்த பராமரிப்பு இல்லாததால் வளாகத்தைச் சுற்றிச் செடி, கொடிகள் மண்டிப் புதர் போல் காட்சியளிக்கிறது. இதனால் அரசுப் பணம் வீணடிக்கப்படுவதாகக் பொதுமக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
பொதுமக்களின் இந்த நீண்ட நாள் கோரிக்கையைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) மற்றும் மாவட்ட ஊராட்சித்துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, தண்ணீர் வசதி செய்து தந்து, பயன்பாட்டிற்கு வராத இந்த மகளிர் சுகாதார வளாகத்தை உடனடியாகச் சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பூண்டி மேலூர் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இணை ஆசிரியர் : நா.ராஜாமணி – 89733 50663
