நத்தம்: நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் FQL செயலி மூலம் குறுகிய காலத்தில் பணம் இரட்டிப்பாகும் எனக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முகவர்களின் வீடுகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதுடன், அவர்களை அழைத்துச் சென்ற காவல் துறை வாகனத்தின் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியே போர்க்களமாக மாறியது.

ரூ.54,000 முதலீடு செய்தால் இரட்டிப்பு: மாய வலையில் வீழ்ந்த 8,500 பேர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கட்டயம்பட்டியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர் தலைமையில் FQL, VG, MAINS APP ஆகிய செயலிகள் இயங்கி வந்ததாகக் கூறப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள காசம்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் விஜய் ஆகியோர் இதன் முகவர்களாகச் செயல்பட்டுள்ளனர்.
ரூ.54,000 முதலீடு செய்தால் 45 நாள்களில் பணம் இரட்டிப்பாகும் என்றும், புதிய உறுப்பினர்களைச் சேர்த்தால் கூடுதல் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். ஆரம்பத்தில் சில மாதங்கள் அமெரிக்க டாலர் கணக்கில் பணம் திரும்பக் கிடைத்ததால், காட்டுத் தீ போல இத்தகவல் பரவியது. இதை நம்பி ரெட்டியபட்டி, வத்திபட்டி, விளாம்பட்டி, என்.புதுக்கோட்டை, பட்டனம்பட்டி, மூங்கில்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 8,500-க்கும் மேற்பட்டோர் பல கோடி ரூபாயை முதலீடு செய்தனர்.
செயலி முடக்கம் & பொதுமக்கள் கொந்தளிப்பு
அதிக அளவிலான முதலீடுகள் குவிந்ததைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக பணத்தைத் திரும்ப வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இறுதியில் செயலியின் செயல்பாடும் முற்றிலுமாக முடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டோர் வெள்ளிக்கிழமை காசம்பட்டியில் உள்ள முகவர்களான ரமேஷ் மற்றும் விஜய் ஆகியோரின் வீடுகளை முற்றுகையிட்டனர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், ரமேஷின் வீட்டின் ஜன்னல்கள் மற்றும் ஏசியை அடித்து நொறுக்கினர்.
6 மணி நேர பேச்சுவார்த்தை – போலீஸ் வேன் மீது கல்வீச்சு
தகவலறிந்து வந்த மேலூர் மற்றும் நத்தம் காவல் ஆய்வாளர் பொன்குணசேகரன், வட்டாட்சியர் டேனியல் பிரேம்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், துணை கண்காணிப்பாளர்கள் சங்கர், சுரேஷ் பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் 6 மணி நேரம் தீவிர பேச்சுவார்த்தை நடத்தினர்.
இறுதியில் முகவர்கள் ரமேஷ், அவரது மனைவி அனிதா, விஜய் உள்ளிட்ட 6 பேரை விசாரணைக்காக போலீஸ் வாகனத்தில் அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது ஆத்திரமடைந்த பொதுமக்கள் வாகனத்தைத் தடுத்து நிறுத்தி, கற்கள் மற்றும் செருப்புகளை வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் காவல் துறை வாகனம் பலத்த சேதமடைந்தது.
டிஐஜி சசிமோகன் ஆய்வு
இதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு சூழல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் நத்தம் காவல் நிலையத்தில் புகார்களை அளிக்குமாறு எஸ்பி ஜெயக்குமார் அறிவுறுத்தியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் சரக டிஐஜி சசிமோகன் நத்தம் காவல் நிலையத்திற்கு நேரில் வருகை தந்து விசாரணை நிலவரம் மற்றும் எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
