பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் காவடி எடுக்கும் பக்தர்கள் புனித நீராடும் முதன்மை நதியாக சண்முகநதி விளங்கி வருகிறது. இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க புண்ணிய நதியை மீட்டெடுக்கும் நோக்கில், ‘We The Leaders’ அமைப்பின் சார்பில் தீவிர தூய்மைப் பணித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

கனகராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், ஏராளமான இளைஞர்களும் தன்னார்வலர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு நதிக்கரையிலும் நீரிலும் தேங்கிக்கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள், பாட்டில்கள் மற்றும் கழிவுப் பொருட்களை அகற்றினர்.

அடுத்த 6 மாத காலத்திற்குள் சண்முகநதியை முழுமையாகத் தூய்மைப்படுத்தி, அதன் பழைய இயற்கை எழிலையும் தூய்மையையும் மீட்டெடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர். ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இந்நதியை மாசுபடாமல் காக்க வேண்டியது பொதுமக்களின் கடமை என்றும், அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் தூய்மைப் பணியின்போது கோரிக்கை வைக்கப்பட்டது.
இணை ஆசிரியர் : நா.ராஜாமணி – 89733 50663.
