Headlines

மதுரை அலங்காநல்லூர் அருகே ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்த 11-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது; பள்ளியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்!

மதுரை அலங்காநல்லூர் அருகே ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்த 11-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது; பள்ளியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்!

மதுரை, ஆக. 27:

மதுரை மாவட்டம் சமயநல்லூர் பர்மா காலனியைச் சேர்ந்த அந்தீஸ்வரன் – ஆனந்த லெட்சுமி தம்பதியின் மகள், அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், 10-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி, தற்போது 11-ஆம் வகுப்பில் படிப்பில் பின்தங்கியதாகத் தெரிகிறது. மேலும், சக மாணவர் ஒருவரைக் காதலித்து வந்த தகவலை நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்திருந்ததைப் பார்த்த ஆசிரியரும், குடும்பத்தினரும் மாணவியைக் கடுமையாகக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மாணவி, நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சமயநல்லூர் போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிக்கிய உருக்கமான தற்கொலைக் கடிதம்:

இதற்கிடையே, தற்கொலைக்கு முன்பாக மாணவி தனது தாய்க்கு கைப்பட எழுதிய உருக்கமான கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

அந்தக் கடிதத்தில், “நான் முன்பு நிறைய தவறுகள் செய்திருக்கிறேன், அதற்காக மன்னித்துவிடுங்கள். ஆனால் இப்போது எந்தத் தவறும் செய்யவில்லை. நான் திருந்தியதை யாரும் புரிந்துகொள்ளவில்லை. எனக்கு வாழ்க்கையைப் பார்க்க பயமாக இருக்கிறது, கடுமையான மன அழுத்தத்தில் (Depression) இருக்கிறேன்” என வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தந்தை உயிருடன் இல்லை என்பதை உணர்த்தும் விதமாக, “நான் அப்பாவிடம் செல்கிறேன், அவர் என்னை நிலாப்போல நன்றாகப் பார்த்துக் கொள்வார். அண்ணன் சபரியை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று உருக்கமாக எழுதியுள்ள மாணவி, தனது தாய், அண்ணன் மற்றும் நண்பர்களை மிகவும் மிஸ் செய்வதாகக் கூறி விடைபெற்றுள்ளார்.

உறவினர்கள் முற்றுகைப் போராட்டம்:

மாணவியின் தற்கொலைக்குக் காரணமான சம்பந்தப்பட்ட ஆசிரியரைக் கைது செய்யக் கோரிக்கை விடுத்து, இதனையறிந்த நூற்றுக்கணக்கான உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அலங்காநல்லூர் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததைத் தொடர்ந்து, உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *