Headlines

பழனியில் கள்ளச்சந்தையில் அமோகமாக நடைபெறும் மது விற்பனை: நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

பழனியில் கள்ளச்சந்தையில் அமோகமாக நடைபெறும் மது விற்பனை: நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

பழனி, ஆக. 26:

திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கணக்கன்பட்டி, ஆயக்குடி, நெய்க்காரப்பட்டி, பெத்தநாயக்கன்பட்டி உள்ளிட்ட இடங்களில் கோயில்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் அரசு கட்டிடங்கள் அருகே சட்டவிரோதமாகக் கள்ளச்சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அரசு விடுமுறை தினங்களில் பெட்டி பெட்டியாக மது பாட்டில்களை வைத்துக்கொண்டு கூவி கூவி விற்பனை செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது.

விடுமுறை நாட்களைப் பயன்படுத்தி, ஒரு மது பாட்டிலுக்கு மூன்று மடங்கு வரை கூடுதல் விலை வைத்து கொள்ளை லாபத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அதிகாலையிலேயே விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பலர் மது அருந்திவிட்டுச் சாலையோரங்களில் விழுந்து கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

அரசு மதுபானக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள், கள்ளச்சந்தை வியாபாரிகளுக்குப் பெட்டி பெட்டியாக மது பாட்டில்களைக் கூடுதல் விலைக்கு எவ்வித தடையும் இன்றி எடுத்துக்கொடுப்பதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதேவேளையில், ஆயக்குடி காவல் ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் நெய்க்காரப்பட்டி காவல் ஆய்வாளர் சத்யமூர்த்தி ஆகியோர் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, சட்டவிரோத மது விற்பனையாளர்களைக் கைது செய்து வருவது பொதுமக்களிடையே பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

எனினும், மதுவிலக்குத் துறை அமைச்சரின் தொகுதியிலேயே இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வது அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருவதாகக் கூறும் பொதுமக்கள், காவல்துறை மற்றும் மதுவிலக்குத் துறை இணைந்து மதுக்கடை ஊழியர்களை முறைப்படுத்த வேண்டும் என்றும், கள்ளச்சந்தை மது விற்பனையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *