வெள்ளமோடி, ஆக. 27:
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளமோடி பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு பேக்கரியில், மக்களின் உடல்நலனோடு விளையாடும் வகையில் எவ்வித முறையான லேபிளும், காலாவதி தேதியும் இன்றி தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கு விற்பனைக்காக அடுக்கப்பட்டுள்ள பல பிளாஸ்டிக் கண்டெய்னர்களில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, எடை அல்லது FSSAI உரிம எண் என எந்தவொரு அடிப்படைத் தகவலும் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்படவில்லை. சில டப்பாக்களில் மட்டும் பெயரளவுக்கு மார்க்கர் (Marker) பேனாவால் ஏதோ சில தேதிகள் கிறுக்கி வைக்கப்பட்டுள்ளன; பல டப்பாக்களில் அதுகூட இல்லை. இது வாடிக்கையாளர்களை அப்பட்டமாக ஏமாற்றும் செயலாகும்.

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் (FSSAI) 2006-ன் படி, பேக்கிங் செய்யப்பட்ட எந்தவொரு உணவுப் பொருளாக இருந்தாலும் அதில் முறையான அச்சிடப்பட்ட லேபிள் கட்டாயம் இருக்க வேண்டும். ஆனால், மார்க்கரால் எழுதி மக்களை ஏமாற்றும் இந்த சட்டவிரோத விற்பனையை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எப்படி அனுமதிக்கிறார்கள்? அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்களா அல்லது தெரிந்தே கண்களை மூடிக்கொண்டிருக்கிறார்களா? இப்படி எந்த உத்தரவாதமும் இல்லாத, எத்தனை நாட்கள் பழமையானது என்றே தெரியாத தின்பண்டங்களை வாங்கி உண்டு குழந்தைகளுக்கு ஃபுட் பாய்சன் போன்ற கொடிய பாதிப்புகள் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது? சம்பந்தப்பட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக வெள்ளமோடியில் உள்ள இந்த பேக்கரியில் அதிரடி ஆய்வு நடத்தி, கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் நுகர்வோரின் வலுவான கோரிக்கையாக உள்ளது.
