Headlines

இருசக்கர வாகன ஓட்டுநர், பின்னால் பயணிப்பவர் இருவரும் தலைக்கவசம் அணிய வேண்டும்: கன்னியாகுமரியில் விழிப்புணர்வு பேரணி.

இருசக்கர வாகன ஓட்டுநர், பின்னால் பயணிப்பவர் இருவரும் தலைக்கவசம் அணிய வேண்டும்: கன்னியாகுமரியில் விழிப்புணர்வு பேரணி

சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தி காவல் துறை சார்பில் நடைபெற்ற மெகா இருசக்கர வாகன பேரணி கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தியும், இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்து செல்லும் நபர் என இருவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதை எடுத்துரைத்தும் மெகா விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின், IPS தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணி, நாகர்கோவில் வடசேரி ஜங்ஷனில் தொடங்கியது. சாலைப் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றுவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது பேரணியின் முக்கிய நோக்கமாக இருந்தது.

வடசேரி ஜங்ஷனில் இருந்து புறப்பட்ட பேரணி, மணிமேடை, கோர்ட் ரோடு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பார்வதிபுரம் பாலம் வழியாகச் சென்று மீண்டும் வடசேரி ஜங்ஷனில் நிறைவடைந்தது.

பேரணியில் நாகர்கோவில் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் இளஞ்செழியன், வடசேரி காவல் நிலைய ஆய்வாளர் மோகன ஐயர், நாகர்கோவில் போக்குவரத்துப் பிரிவு ஆய்வாளர் அருண் உள்ளிட்ட காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

மேலும், 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, தலைக்கவசம் அணிவதன் அவசியம் மற்றும் சாலைப் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சாலை விபத்துகளில் இருசக்கர வாகனப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தலைக்கவசம் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, ஓட்டுநருடன் பின்னால் அமர்ந்து பயணிப்பவரும் தலைக்கவசம் அணிவது விபத்துகளால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க உதவும்.

பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை முறையாகக் கடைப்பிடித்து, இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் இருவரும் தலைக்கவசம் அணிந்து பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என காவல் துறை சார்பில் வலியுறுத்தப்பட்டது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *