Headlines

புதிய கட்சி தொடங்கும் மிரட்டலுக்கு பணிந்ததா தலைமை? முன்னாள் மா.செ-வுக்கு மாநில பதவி? – நாகர்கோவிலில் சலசலப்பு!

புதிய கட்சி தொடங்கும் மிரட்டலுக்கு பணிந்ததா தலைமை? முன்னாள் மா.செ-வுக்கு மாநில பதவி? - நாகர்கோவிலில் சலசலப்பு!

நாகர்கோவில், பிப் 13 :

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகர முன்னாள் மாவட்டச் செயலாளராகப் பதவி வகித்தவர் அல் காலித். இவர் அண்மையில், கூட்டணிக் கட்சித் தலைவர்களுடனான மோதல் போக்கு, அரசு அதிகாரிகளுடன் இணக்கமின்மை, கட்டப்பஞ்சாயத்து புகார்கள் மற்றும் கட்சித் தொண்டர்களிடம் முரண்பாடு என அடுக்கடுக்கான புகார்களின் அடிப்படையில் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைமைக்கு அல் காலித் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், “கட்சிக்காக முழுநேரப் பணிகளை மேற்கொண்ட என்னை, பொறுப்பிலிருந்து நீக்கியது வருத்தமளிக்கிறது. எனவே, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுகிறேன்” எனத் தெரிவித்திருந்தார். மேலும், அவர் தனிக்கட்சி தொடங்கவிருப்பதாகவும் தகவல்கள் பரவின.

இந்நிலையில், விசிக தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் நேற்று அல் காலித் அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த உரையாடலின் முடிவில், அல் காலித் அவர்களுக்கு இன்று (13–02–2026) மதியத்திற்குள் கட்சியின் முக்கிய மாநிலப் பொறுப்பு வழங்கப்படும் எனத் தலைவர் உறுதியளித்திருப்பதாகச் செய்திகள் கசிந்துள்ளன.

ஏற்கனவே கூட்டணிக் கட்சியினர் மற்றும் அரசு அதிகாரிகளுடனான மோதல் போக்கினால் அதிருப்திக்குள்ளாகிப் பதவி பறிக்கப்பட்ட ஒருவருக்கு, மீண்டும் மாநில அளவிலான பொறுப்பு வழங்கப்படுவது விசிக தொண்டர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினரிடையே கடும் அதிருப்தியையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தனது ‘புதிய கட்சி’ அறிவிப்பு தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தி, மீண்டும் பதவி கிடைக்க வழிவகை செய்துள்ளதாக அல் காலித் தனது ஆதரவாளர்களிடம் பெருமிதம் கொள்வதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் தரப்பிலிருந்து அல் காலித் அவர்களுக்கு ரூ. 3 கோடி வரை பேரம் பேசப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. அல் காலித், தனது நண்பரான அருமனை ஸ்டீபன் என்பவர் மூலமாக, விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதே இந்தப் பேச்சுவார்த்தைகளுக்குக் காரணம் எனவும் அரசியல் விமர்சகர்கள் கிசுகிசுக்கின்றனர்.

பதவிப் பறிப்பு, விலகல் அறிவிப்பு, திடீர் அழைப்பு என அடுத்தடுத்து அரங்கேறும் இச்சம்பவங்கள் குமரி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி : நாகர்கோவில் நிருபர் ராமகிருஷ்ணன்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *