Headlines

மதுவின் பிடியில் தமிழ்ச் சமூகம்: இன்னும் 30 ஆண்டுகளில் DNA அழியும் அபாயம்! – பொது சுகாதார நிபுணர் எச்சரிக்கை!

மதுவின் பிடியில் தமிழ்ச் சமூகம்: இன்னும் 30 ஆண்டுகளில் DNA அழியும் அபாயம்! – பொது சுகாதார நிபுணர் எச்சரிக்கை!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மதுப்பழக்கம், தனிநபர் ஆரோக்கியத்தை மட்டுமல்லாது, ஒரு சமூகத்தின் மரபணுவையே (DNA) மாற்றியமைக்கும் பேரழிவை நோக்கி அழைத்துச் செல்வதாகப் பொது சுகாதாரத் துறை முன்னாள் இயக்குநர் மருத்துவர் குழந்தைசாமி அவர்கள் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

கடந்த 1971-ஆம் ஆண்டு தமிழகத்தில் மதுவிலக்கு விலக்கிக் கொள்ளப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழகத்தில் இரு தலைமுறைகளாக மதுப்பழக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

பொது சுகாதார வல்லுநர்களின் ஆய்வின்படி, தொடர்ந்து மது அருந்துபவர்களின் உடலியல் மாற்றங்கள் அவர்களின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கடத்தப்படுகிறது. அதன்படி, தமிழகத்தில் மது குடித்த முதல் இரு தலைமுறையினரால், அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளின் மரபணுவிலும் கணிசமான பாதிப்புகள் மற்றும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மை. தற்போது நாம் மூன்றாவது தலைமுறையை எதிர்கொண்டிருக்கிறோம். இந்த தலைமுறையிலும் மதுப்பழக்கம் இதே தீவிரத்துடன் தொடருமானால், அதன் விளைவுகள் மிகவும் கொடூரமானதாக இருக்கும் என்று எச்சரிக்கப்படுகிறது.

பிறக்கப்போகும் குழந்தைகள், தாயின் கருவிலேயே மதுவின் தாக்கத்திற்கு உள்ளாகி, பிறக்கும்போதே அதன் தாக்கம் கொண்டவர்களாக பிறக்கும் அபாயம் அதிகமாக இருக்கும். பல தலைமுறைகளாக ஆரோக்கியமாக வாழ்ந்து வந்த தமிழர்களின் பாரம்பரிய DNA முழுமையாக உருமாறி, பல்வேறு நோய் எதிர்ப்பாற்றல் குறைபாடுகளுக்கும், உடல்-மன நலம் சார்ந்த குறைபாடுகளுக்கும் வழிவகுக்கும். அடுத்த 30 ஆண்டுகளில் இந்த மரபணுச் சீரழிவு உச்சத்தை எட்டும் பட்சத்தில், ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்தின் சுகாதாரமும் கட்டமைப்பும் சீர்குலைந்து, சமூகமே அழியும் நிலை உருவாகலாம்.

உடல் உறுப்புகள் பாதிப்பு, பொருளாதாரச் சீரழிவு, குடும்ப அமைப்பில் விரிசல் போன்ற குறுகிய காலப் பாதிப்புகளைத் தாண்டி, தற்போது தமிழ் இனத்தின் மரபணுவிற்கே ஆபத்து வந்துள்ளது. இதனைத் தடுக்க வேண்டுமெனில், மதுவினால் வரும் வருவாயை விடக் சமூகத்தின் ஆரோக்கியமே முக்கியம் என்பதைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் மதுவை முழுமையாக ஒழிப்பதே ஒரே மற்றும் நிரந்தரத் தீர்வாக அமையும் என்று மருத்துவர் குழந்தைசாமி உறுதியாகத் தெரிவித்துள்ளார். தமிழ் சமூகத்தின் எதிர்கால தலைமுறையைக் காப்பாற்ற, மது அரக்கனிடமிருந்து விடுபட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்பதை இந்த எச்சரிக்கை உணர்த்துகிறது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *