அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சாஹீன் அகமது, ஜுயல் அக்தர் ஆகிய இருவருக்கும் வயது வெறும் 20 தான். குடும்ப வறுமையைப் போக்கலாம் என்ற ஆசையில், பல ஆயிரம் கிலோமீட்டர்கள் தாண்டி வந்து, கூடங்குளம் அனல்மின் நிலையத்தில் உள்ள PPK என்ற ஒப்பந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளனர்.
ஆனால், அங்கு அவர்களுக்குத் தங்குமிடம், உணவு, செய்த வேலைக்கான சம்பளம் என எதுவும் முறையாக வழங்கப்படவில்லை. இரக்கமின்றி, அடிமைகளைப் போல அதிக நேரம் வேலை வாங்கி அந்த நிறுவனம் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்தக் கொடுமையைத் தாங்க முடியாமல், எப்படியாவது சொந்த ஊருக்குத் திரும்பிவிடலாம் என முடிவெடுத்து, அங்கிருந்து தப்பித்து கோட்டாறு ரயில் நிலையத்திற்கு வந்துள்ளனர் அந்த இரு இளைஞர்களும்.
ஆனால், இவர்களைத் தமிழகத்திற்கு அனுப்பிய ஏஜென்ட், நிறுவனத்தின் சூப்பர்வைசர் திருமணிக்குத் தகவல் கொடுத்துள்ளார். “அவர்களின் செல்போன்களைப் பறித்துவிட்டால், ஊருக்குச் செல்ல முடியாது” என அவர் கூறியதாகத் தகவல். இதையடுத்து, ரயில் நிலையத்திற்கே விரட்டிவந்த சூப்பர்வைசர் திருமணி, அந்த இளைஞர்களைத் தாக்கி, அவர்களின் செல்போன்களைப் பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.
கையில் ஒரு ரூபாய் கூட இல்லாமல், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு இருந்த ஒரே வழியான செல்போனும் இழந்து, மொழி தெரியாத ஊரில் செய்வதறியாது அழுதுகொண்டு நின்றனர் அந்த இரு இளைஞர்களும்.
வேற்று மாநிலத்தவர்கள் தானே என பலர் அவர்களைக் கடந்து சென்ற நிலையில், அந்த வழியாக வந்த திமுக 38-வது வட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.எஸ்.பரத், அவர்களின் பரிதாப நிலையைக் கண்டு மனம் நெகிழ்ந்தார். உடனடியாக, ‘தமிழக விடியல்’ நிருபர் பாவலர் ரியாஸைத் தொடர்புகொண்டு உதவி கேட்டார்.
இதையடுத்து, பாவலர் ரியாஸும், கோட்டாறு பகுதி திமுக பிரமுகர் ரபீக்கும் இணைந்து கோட்டாறு காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். அவர்களின் உதவியுடன் சூப்பர்வைசரை மடக்கிப்பிடித்து, இளைஞர்களின் செல்போன்கள் உள்ளிட்ட உடைமைகள் மீட்கப்பட்டன.
அதுமட்டுமின்றி, அந்த இரு இளைஞர்களும் பாதுகாப்பாக தங்களது சொந்த ஊரான அசாமிற்குத் திரும்பிச் செல்ல தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வழியனுப்பி வைத்தனர்.
ஆதரவின்றி நின்ற வேற்று மாநிலத் தொழிலாளர்களுக்கு, மொழியைத் தாண்டிய மனிதநேயத்துடன் உதவிய இவர்களின் செயலை பொதுமக்கள் பலரும் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.
