பேருந்து நிறுத்தத்தில் போதையில் அநாகரிகமாக கிடக்கும் நபர்கள்; பெண்கள், மாணவிகள் அச்சம்
தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைத்துள்ள முதலமைச்சர் விஜய், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் 717 அரசு டாஸ்மாக் (TASMAC) மதுபானக் கடைகளை மூட அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவின் அடிப்படையில், ஜூன் மாத முதல் வாரத்திற்குள் குறிப்பிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் பெண்களின் நலனை கருத்தில் கொண்டு, வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களின் 500 மீட்டர் சுற்றளவிற்குள் செயல்பட்டு வந்த கடைகள் அடையாளம் காணப்பட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இருந்த 276 கடைகளும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் செயல்பட்டு வந்த 186 கடைகளும் மூடப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகள் அருகே இருந்த 255 கடைகளும் அகற்றப்பட்டுள்ளன.
ஆலன்கோட்டை பேருந்து நிறுத்தத்தில் தொடரும் அவலம்
ஒருபுறம் அரசு மதுக்கடைகளை மூடி, போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் ஆலன்கோட்டை சந்திப்பு பேருந்து நிறுத்தத்தில் தினமும் அரங்கேறும் காட்சிகள் பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளன.
ஆலன்கோட்டை சி.எஸ்.ஐ. தேவாலயம் மற்றும் பிரதான சந்திப்புக்கு அருகில் அமைந்துள்ள பேருந்து நிறுத்த நிழற்குடையில், ஒருவர் அதிகளவில் மது அருந்திவிட்டு ஆடை விலகிய நிலையில் அநாகரிகமாக தரையில் உறங்கிக் கிடப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த பேருந்து நிறுத்தத்தை தினமும் பள்ளி, கல்லூரி மாணவிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் பெந்தெகொஸ்தே மிஷன் சபையைச் சேர்ந்த பெண் பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களின் முன்னிலையில் போதையில் உள்ளவர்கள் இவ்வாறு அநாகரிகமாக நடந்து கொள்வது பெண்களிடையே அச்சத்தையும், முகம் சுழிக்கும் நிலையையும் ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கை
முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு 717 மதுக்கடைகளை மூடி முக்கியமான மாற்றத்தைத் தொடங்கியுள்ள நிலையில், கிராமப்புறங்களில் உள்ள பேருந்து நிறுத்தங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் மது அருந்தி இடையூறு விளைவிப்பவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, ஆலன்கோட்டை பேருந்து நிறுத்தத்தை உடனடியாக முறைப்படுத்தி, சமூக விரோதிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாநில அரசும், உள்ளூர் நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுக்குமா என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.
