விளவங்கோடு, ஏப். 4:
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட, கேரளாவைச் சேர்ந்த டி.டி. பிரவீன் என்பவரை வேட்பாளராக அறிவித்ததை எதிர்த்து, அந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெறக் கோரி இன்று விளவங்கோட்டில் காங்கிரஸ் கட்சி தொண்டர்களே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“விளவங்கோட்டில் காங்கிரஸுக்கு உள்ளூர் முகங்கள் இல்லையா?”, “கட்சிக்காக பல ஆண்டுகள் உழைத்த தொண்டர்களின் தியாகத்திற்கு இதுவே பரிசா?” என்ற கேள்விகளை எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள், வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை திணிப்பது தொகுதி மக்களையும், கட்சியின் அடிப்படை தொண்டர்களையும் அவமதிப்பதாக கடுமையாக சாடினர்.
தேர்தல் நேரத்தில் உள்ளூர் அமைப்பின் மனநிலையைப் புரிந்துகொள்ளாமல், வெற்றி பெறும் நம்பிக்கையை விட அவசர அரசியல் கணக்கில் எடுக்கப்பட்ட முடிவுதான் இது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. “விளவங்கோட்டில் காங்கிரஸ் தரப்பு தரை மட்டத்தில் பலவீனமடைந்துவிட்டதற்கான ஒப்புதல்தான் இந்த வேட்பாளர் தேர்வு” என்றும் போராட்டத்தில் பங்கேற்றோர் வெளிப்படையாக கருத்து தெரிவித்தனர்.
மேலும், இந்த ஆர்ப்பாட்டம் சாதாரண எதிர்ப்பாக இல்லாமல், காங்கிரஸ் கட்சிக்குள் உருவாகி வரும் அதிருப்தி, புறக்கணிப்பு உணர்வு, மற்றும் தோல்வி பயம் ஆகியவற்றின் வெளிப்படையான வெடிப்பாக பார்க்கப்படுகிறது. வேட்பாளர் அறிவித்த சில மணி நேரங்களிலேயே, அதே கட்சியின் தொண்டர்களே தெருவில் இறங்கி எதிர்ப்பு பதிவு செய்திருப்பது, விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் அமைப்பு கடுமையான உள்கட்சிச் சிக்கலில் சிக்கியிருப்பதைக் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
“எதிர்க்கட்சியினரைக் காட்டிலும், சொந்தக் கட்சியினரின் எதிர்ப்பையே முதலில் சமாளிக்க வேண்டிய நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது” என்ற கருத்தும் அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக பேசப்படுகிறது.
தமிழக விடியல் செய்திகளுக்காக கல்குளம் தாலுக்கா நிருபர் அன்ஷாத் மாலிக்
