கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின் அவர்களுக்கு, நாகர்கோவிலில் செய்தித்துறை மற்றும் நாகர்கோவில் பிரஸ் கிளப் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக ராஜேஷ் குமார் கலந்து கொண்டார். மாவட்ட ஆட்சியர் பிரதாப் விழாவில் உரையாற்றினார்.
விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர், சாலைப் பாதுகாப்பு விதிகளை அமல்படுத்துவதில் மாவட்ட காவல்துறை எவ்வித விதிவிலக்கும் இன்றி செயல்பட்டு வருவதாகக் கூறினார்.
“மாவட்ட ஆட்சியரான நானே ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றாலும் அபராதம் விதிக்கப்படும் அளவிற்கு சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இது அரசின் வருவாயை அதிகரிப்பதற்காக அல்ல; மனித உயிர்களைப் பாதுகாப்பதே இதன் நோக்கம்,” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலை சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருவதாகவும், அதனால் மாவட்ட நிர்வாகம் தனது பணிகளை சீராக முன்னெடுக்க முடிவதாகவும் அவர் குறிப்பிட்டார். காவல்துறையின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் பொதுமக்களின் பாதுகாப்பு உணர்வை வலுப்படுத்தியுள்ளதாகவும் அவர் பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்டம் முழுவதும் 15 இடங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப வசதியுடன் கூடிய கண்காணிப்பு சிசிடிவி கேமராக்கள் அமைக்கும் திட்டம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
சாலைப் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டது.
பாராட்டு விழாவில் காவல்துறை அதிகாரிகள், செய்தியாளர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சாலைப் பாதுகாப்பு, சட்ட அமலாக்கம் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் குறித்து நிகழ்வில் கருத்துகள் பகிரப்பட்டன.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.
