வரவிருக்கும் 2026 சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலுக்கான திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு விவரங்கள் அரசியல் களத்தில் சூட்டைக் கிளப்பியுள்ளன.
ஆளும் கட்சியான திமுக இம்முறை கையாண்டுள்ள தொகுதிப் பங்கீட்டு வியூகம் பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது. குறிப்பாக, கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, பாமக மற்றும் பாஜக ஆகிய எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்ற 29 முக்கிய தொகுதிகளை, இம்முறை திமுக தனது கூட்டணிக் கட்சிகளின் வசம் ஒப்படைத்துள்ளது.
கூட்டணிக் கட்சிகளிலேயே அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளில் கடலூர், ஊத்தங்கரை (தனி), கவுண்டம்பாளையம், ஆத்தூர் (தனி), பெண்ணாநகரம், சிங்காநல்லூர், அம்பாசமுத்திரம், கிருஷ்ணகிரி, உசிலம்பட்டி மற்றும் மேலூர் என 10 தொகுதிகள் கடந்த முறை அதிமுக மற்றும் பாமக வென்ற களங்களாகும்.
அதேபோல, கூட்டணியில் உள்ள தேமுதிக-விற்கு ஒதுக்கப்பட்டுள்ள தருமபுரி, சேலம் மேற்கு, போளூர், ஓமலூர், மைலம் ஆகிய 5 தொகுதிகளும் கடந்த தேர்தலில் அதிமுக மற்றும் பாமக வசமிருந்த சவாலான தொகுதிகளாகும்.
இடதுசாரிகளில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு (CPI) ஒதுக்கப்பட்டுள்ள திருவில்லிபுத்தூர் (தனி), திருப்பூர் வடக்கு, பவானிசாகர் (தனி) ஆகிய 3 தொகுதிகளும் கடந்த முறை அதிமுக வென்றவையே.
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு (விசிக) ஒதுக்கப்பட்டுள்ள அரக்கோணம் (தனி), திண்டிவனம் (தனி), கள்ளக்குறிச்சி (தனி) ஆகிய 3 தொகுதிகளிலும் கடந்த முறை அதிமுகவே வாகை சூடியது. மதிமுக போட்டியிடும் மொடக்குறிச்சி மற்றும் கடையநல்லூர் ஆகிய இரண்டுமே கடந்த முறை பாஜக மற்றும் அதிமுக வென்ற தொகுதிகளாகும்.
பெரிய கட்சிகள் மட்டுமின்றி, கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கும் இதே வியூகமே கடைபிடிக்கப்பட்டுள்ளது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள பொள்ளாச்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு ஒதுக்கப்பட்டுள்ள வாணியம்பாடி, முக்குலத்தோர் புலிப்படைக்கு ஒதுக்கப்பட்டுள்ள சிவகங்கை, மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள சிதம்பரம், எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நன்னிலம் மற்றும் தமிழர் தேசம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நத்தம் என இந்த 6 தொகுதிகளுமே கடந்த 2021 தேர்தலில் அதிமுக தன்வசப்படுத்திய கோட்டைகளாகும்.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, எதிர்க்கட்சிகளின் வாக்கு வங்கி வலுவாக உள்ள சவாலான தொகுதிகளைக் குறிவைத்து கூட்டணிக் கட்சிகள் வசம் திமுக வழங்கியிருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். திமுகவின் இந்தத் தொகுதிப் பங்கீட்டு வியூகம் கூட்டணிக் கட்சிகளுக்குப் பெரும் சவாலாக அமையும் அதே வேளையில், இதில் அவர்கள் பெறும் வெற்றியே இந்தக் கூட்டணிக்கான உண்மையான பலப்பரீட்சையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
