Headlines

களத்தில் திமுக vs அதிமுகவா? அல்லது திமுக vs பாஜகவா? இரட்டை இலையைத் தவிர்த்து ‘தாமரை’யில் சங்கமிக்கும் கூட்டணிக் கட்சிகள்!

களத்தில் திமுக vs அதிமுகவா? அல்லது திமுக vs பாஜகவா? இரட்டை இலையைத் தவிர்த்து ‘தாமரை’யில் சங்கமிக்கும் கூட்டணிக் கட்சிகள்!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் நாளுக்கு நாள் எதிர்பார்ப்புகளை எகிற வைத்துக் கொண்டிருக்கிறது.

காலம் காலமாக தமிழக அரசியல் களம் என்பது ‘திமுக vs அதிமுக’ என்ற இருருவப் போட்டியாகவே இருந்து வந்துள்ளது.

ஆனால், இந்தத் தேர்தலில் திரைக்குப் பின்னால் அரங்கேறும் கூட்டணி வியூகங்களைப் பார்க்கும்போது, களம் மெல்ல ‘திமுக vs பாஜக’ என்ற திசையை நோக்கி நகர்த்தப்படுகிறதா என்ற சந்தேகம் அரசியல் நோக்கர்கள் மத்தியில் வலுவாக எழுந்துள்ளது.

குறிப்பாக, கூட்டணிக் கட்சிகளை அதிமுகவின் ‘இரட்டை இலை’க்கு பதிலாகத் பாஜகவின் ‘தாமரை’ சின்னத்தில் போட்டியிட வைக்கும் நகர்வு, அதிமுகவின் எதிர்கால அரசியல் அஸ்திவாரத்திற்கே விடப்பட்ட சவாலாகப் பார்க்கப்படுகிறது.

வரலாறு சொல்லும் பாடம்:

தனித்தன்மை vs கூட்டணி பலம்
கடந்த கால தேர்தல் முடிவுகளின் தரவுகளைப் பார்த்தால் ஒரு உண்மை தெளிவாக விளங்கும். 1980, 1984, 1989, 2006, 2011, 2016 என பாஜக பெரிய கூட்டணிகள் இன்றி தனித்துப் போட்டியிட்ட தேர்தல்களில் ஒரு இடத்தைக் கூட வெல்லவில்லை (1996-ல் பத்மநாபபுரத்தில் கிடைத்த ஒரே ஒரு வெற்றியைத் தவிர).

ஆனால், 2001-ல் திமுக கூட்டணியிலும், 2021-ல் அதிமுக கூட்டணியிலும் தலா 4 இடங்களை வென்றது.

ஆக, வலுவான திராவிடக் கட்சிகளின் வாக்கு வங்கி இல்லாமல் பாஜகவால் தமிழகச் சட்டமன்றத்தின் படிகளை ஏற முடியாது என்பதே மறுக்க முடியாத தரவு.

2026 மாஸ்டர் பிளான்:

தாமரையில் தஞ்சம் அடையும் கூட்டணிக் கட்சிகள்
இந்த 2026 தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) ஒரு புதிய மற்றும் மிக நுட்பமான மாற்றம் நடந்துள்ளது. தங்களது கூட்டணிக் கட்சிகளைத் தனிச் சின்னத்திலோ அல்லது பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் ‘இரட்டை இலை’ சின்னத்திலோ நிற்க விடாமல், நேரடியாகத் தங்களது ‘தாமரை’ சின்னத்திலேயே நிற்க வைப்பதில் பாஜக அதிக தீவிரம் காட்டியுள்ளது.

தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா): தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜி.கே. வாசன் தலைமையிலான தமாகா, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை, கிள்ளியூர், கும்பகோணம் ஆகிய 5 தொகுதிகளிலுமே தங்களின் சொந்த ‘சைக்கிள்’ சின்னத்தைத் தவிர்த்துவிட்டு பாஜகவின் ‘தாமரை’ சின்னத்தில் களம் காண்கிறது.

பிற கட்சிகள்: தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் (ஜான் பாண்டியன்) ராஜபாளையத்தில் தாமரை சின்னத்திலேயே போட்டியிடுகிறது. மேலும் புதிய நீதிக் கட்சி போன்ற அமைப்புகளும் இதே பாணியைப் பின்பற்றுகின்றன.

மறுபுறம், பாமக (18 இடங்கள்) மற்றும் அமமுக (11 இடங்கள்) தங்களின் சொந்த சின்னத்தில் போட்டியிடுகின்றன.

இதன் மூலம், அதிமுக கூட்டணியில் உள்ள சிறு கட்சிகள் இரட்டை இலையில் போட்டியிடும் பாரம்பரிய வழக்கம் வெகுவாகக் குறைக்கப்பட்டு, அவை தாமரையை நோக்கித் திருப்பப்பட்டுள்ளன.

தற்போதைய நிலவரப்படி பாஜக போட்டியிடும் 27 இடங்கள் மட்டுமின்றி, கூட்டணிக் கட்சிகளின் இடங்களையும் சேர்த்து ‘தாமரை’ சின்னம் 33-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் களம் காண்கிறது.

அதிமுகவை பின்னுக்குத் தள்ளுகிறதா பாஜக? (பின்னணி அரசியல்)

இங்குதான் அரசியல் சதுரங்கத்தின் மிக முக்கியக் கேள்வி எழுகிறது. ஏன் தமாகா போன்ற கட்சிகளைத் தாமரையில் நிற்க வைக்க வேண்டும்? இது வெறும் சின்னம் தொடர்பான சிக்கலா அல்லது ஆழமான அரசியல் கணக்கா?

தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, தாமரை சின்னத்தில் விழும் வாக்குகள் அனைத்தும் அதிகாரப்பூர்வமாக பாஜகவின் வாக்கு வங்கியாகவே (Vote Share) கணக்கிடப்படும்.

சொந்தக் கட்சி வேட்பாளர்கள் பெறும் வாக்குகளோடு, கூட்டணிக் கட்சிகள் பெறும் வாக்குகளையும் தங்கள் கணக்கில் வரவு வைப்பதன் மூலம், “தமிழகத்தில் நாங்கள் இரட்டை இலக்க (Double Digit) வாக்கு சதவீதத்தைப் பெற்றுவிட்டோம்; நாங்கள்தான் திமுகவிற்கு உண்மையான மாற்று சக்தி” என்ற பிம்பத்தை கட்டமைக்க பாஜக முழு வீச்சில் செயல்படுகிறது.

யோசிக்க வேண்டிய கட்டத்தில் அதிமுக!

இந்த வியூகத்தை ஆழமாகப் பார்க்கும்போது, பொதுவெளியிலும் அதிமுக தொண்டர்கள் மத்தியிலும் ஒரு கேள்வி எழுவதைத் தவிர்க்க முடிலியவில்லை.

தங்களின் தோள்களில் ஏறிப் பயணித்து, தங்களின் வாக்கு வங்கியையே பயன்படுத்தி சட்டமன்றத்திற்குள் நுழையும் ஒரு கட்சி, இப்போது தங்களது கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளையும் அதிகாரப்பூர்வமாகத் தன்வசப்படுத்தி, இறுதியில் தங்களையே பின்னுக்குத் தள்ளிவிட்டு ‘பிரதான எதிர்க்கட்சி’ என்ற நாற்காலியை நோக்கி நகர்கிறதா என்கிறார்கள் அதிமுக விசுவாசிகள்.

கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைக்கிறோம் என்ற பெயரில், களத்தில் ‘இரட்டை இலை’யின் தாக்கத்தைக் குறைத்து, ‘தாமரை’யை ஊடுருவச் செய்யும் இந்தச் ‘சைலண்ட் ஆபரேஷன்’ வியூகம், அதிமுகவின் கவனத்திற்கு வரவில்லையா அல்லது தெரிந்தே களத்தை விட்டுக் கொடுக்கிறார்களா என்பதும் கேள்வியாக உள்ளது.

எப்படியோ, தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி இடத்திற்கான இந்த நிழல் யுத்தத்தின் உண்மையான விடை, 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிடும்!

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *