கன்னியாகுமரி: முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜின் பின்புல நிகழ்வுகளை பேசுவதாகக் கூறி இணையத்தில் வெளியாகியுள்ள ஒரு வீடியோ, கன்னியாகுமரி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
அந்த வீடியோவில், முன்னாள் அமைச்சர் தன்னைச் சுற்றி ஒரு குறிப்பிட்ட நபர்களை மட்டுமே வைத்துள்ளதாகவும், உண்மையான கட்சித் தொண்டர்களுக்கும் அவருக்கும் இடையே பெரும் இடைவெளி இருப்பதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தன்னை ஜெய தங்கராஜ் அறிமுகப்படுத்திக்கொள்ளும் அந்த நபர், முன்னாள் அமைச்சர் பொதுமக்களுக்கோ, கட்சிக்காரர்களுக்கோ எளிதில் கிடைப்பதில்லை என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
அமைச்சரைத் தொடர்புகொள்ள முயன்றால், ஜஸ்டின், சாம், போற்றி உள்ளிட்ட ஒரு சில உதவியாளர்களே அழைப்புகளை எடுப்பதாகவும், அவர்கள் அமைச்சரின் பெயரைப் பயன்படுத்தி பல்வேறு அதிகார துஷ்பிரயோகங்களில் ஈடுபடுவதாகவும் அந்த வீடியோவில் பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இவர்கள் ஆடம்பர வாழ்க்கையை வாழ்வதாகவும், பொதுமக்களிடம் இருந்து அமைச்சரைத் தனிமைப்படுத்தி வைத்துள்ளதாகவும் அவர் சாடியுள்ளார்.
குறிப்பாக, ஜஸ்டின் மற்றும் போற்றி ஆகிய உதவியாளர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன.
24 மணி நேரமும் அமைச்சரின் இல்லத்திலேயே முகாமிட்டிருக்கும் ஜஸ்டின் என்பவரைக் கடந்துதான் அமைச்சரைப் பார்க்க முடியும் என்ற நிலை இருப்பதாகவும், “மக்கள் மனோ தங்கராஜுக்கு ஓட்டுப் போட்டார்களா? அல்லது அவரது உதவியாளர்களுக்கு ஓட்டுப் போட்டார்களா?” என்றும் அவர் எழுப்பியுள்ள கேள்வி கட்சியினர் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல, நாங்குநேரியைச் சேர்ந்த போற்றி என்பவர் கன்னியாகுமரியில் ஆதிக்கம் செலுத்துவதாகவும், குறுகிய காலத்தில் அருமனையில் சொத்து வாங்கியுள்ளதாகவும் கூறப்படும் தகவல், சொத்துக்குவிப்பு குறித்த சந்தேகங்களை எழுப்புவதாக அமைந்துள்ளது.
முன்னாள் அமைச்சரின் விமானப் பயணங்கள் குறித்தும் அந்த வீடியோவில் சில சர்ச்சைக்குரிய கருத்துகள் பதிவாகியுள்ளன. அந்தப் பயணங்களில் அவருடன் யார் யார் பயணித்தார்கள் என்பது குறித்த பட்டியல் தன்னிடம் இருப்பதாகவும், அதை விரைவில் வெளியிடப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
இதுமட்டுமின்றி, 1996-ல் இருந்து மனோ தங்கராஜின் அரசியல் வளர்ச்சிக்குத் துணையாக இருந்த இக்னேஷியஸ் போன்ற பழைய விசுவாசிகள் தற்போது வறுமையில் வாடுவதாகவும், ஆனால் புதிதாக வந்த சிலர் அதிகாரத்தின் மூலம் கோடீஸ்வரர்களாக வலம் வருவதாகவும் அந்த வீடியோவில் ஆதங்கத்துடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவரின் உதவியுடன் சில பழைய சர்ச்சைகள் மூடி மறைக்கப்பட்டதாகவும் அவர் சூசகமாகக் குறிப்பிட்டுள்ளார்.
பொது வெளியில் நபர் ஒருவர் முன்னாள் அமைச்சர் மீது இவ்வளவு கடுமையான குற்றச்சாட்டுகளைப் பொதுவெளியில் வைத்திருப்பது, ஆளுங்கட்சி வட்டாரத்தில் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ள தகவல்கள் எந்த அளவிற்கு உண்மையானவை என்பது குறித்த அதிகாரப்பூர்வ விளக்கங்கள் இதுவரை வெளிவரவில்லை.
இருப்பினும், “புகைப்பவன் கையில் நெருப்பு இல்லாமல் இருக்காது” என்பதைப் போல, இந்த வீடியோ குமரி மாவட்ட அரசியலில் பலத்த விவாதங்களை உருவாக்கியுள்ளது.
தன் மீதும், தனது உதவியாளர்கள் மீதும் வைக்கப்பட்டுள்ள இந்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் தரப்பு மௌனம் கலைத்து விளக்கம் அளிக்குமா என்பதைப் பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.
