Headlines

திண்டுக்கல்: வனப்பகுதியில் சட்டவிரோதமாக சாலை அமைப்பு – வனத்துறை அதிகாரி மற்றும் கவுன்சிலர் மீது பரபரப்பு புகார்!

திண்டுக்கல்: வனப்பகுதியில் சட்டவிரோதமாக சாலை அமைப்பு - வனத்துறை அதிகாரி மற்றும் கவுன்சிலர் மீது பரபரப்பு புகார்!

கொடைக்கானல்:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பண்ணைக்காடு கிராமத்தில், வனத்துறைக்குச் சொந்தமான நிலத்தில் சட்டவிரோதமாக மரங்களை வெட்டிச் சாய்த்து சாலை அமைக்கப்பட்டிருப்பதாக எழுந்துள்ள புகார் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பண்ணைக்காடு கிராமத்தைச் சேர்ந்த வலாங்குளம் பகுதி நிலங்கள், ஊத்து வனச்சரகத்தின் கீழ் வருகின்றன. இப்பகுதியில் விவசாயம் செய்து வரும் விவசாயிகள், தங்களது நிலங்களுக்குச் செல்ல சரியான சாலை வசதி இல்லாததால், சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை நடந்து சென்றே விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பட்டா நிலமாக இருந்தாலும் அங்கு விவசாயம் செய்ய வனத்துறையினரிடம் அனுமதி பெற வேண்டிய கட்டாயத்தில் விவசாயிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், பண்ணைக்காடு கிராமத்தைச் சேர்ந்த கோபால் என்பவருடைய மகன் சசி என்பவர் தனது நிலத்தின் ஒரு பகுதியை விற்பனை செய்துள்ளார். அந்த நிலத்திற்குச் செல்ல வழி இல்லாததால், ஊத்து வனத்துறையின் பாதுகாப்பில் உள்ள வலாங்குளம் பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் இருந்த மரங்களைச் சட்டத்திற்குப் புறம்பாக வெட்டிச் சாய்த்துள்ளார். மலைப்பகுதிகளில் கனரக வாகனங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதையும் மீறி ஜேசிபி (JCB) உள்ளிட்ட வாகனங்களைக் கொண்டு வனப்பகுதியில் புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அப்பகுதி விவசாயி ஒருவர் அளித்துள்ள புகாரில் குறிப்பிட்டுள்ளதாவது:
சசி என்பவர் தனது சகோதரர் தங்கதுரை மற்றும் அவரது மனைவியான 9-வது வார்டு கவுன்சிலர் வனிதா ஆகியோரின் செல்வாக்கைப் பயன்படுத்தி இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக, வனத்துறை அலுவலர் ராம்குமார் என்பவர் இதற்கு முழு துணையாக இருந்துள்ளார். வனப்பகுதி அழிக்கப்படுவது குறித்து எச்சரித்தும், அரசியல் மற்றும் அதிகார பலத்தால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

அரசுக்குச் சொந்தமான வன நிலத்தை ஆக்கிரமித்து, மரங்களை அழித்து சாலை அமைத்த சசி, அவருக்கு உடந்தையாக இருந்த கவுன்சிலர் வனிதா மற்றும் வனத்துறை அலுவலர் ராம்குமார் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மை தலைமை வனப் பாதுகாவலருக்கு பாதிக்கப்பட்ட விவசாயி புகார் மனு அனுப்பியுள்ளார்.

வனத்துறை அதிகாரிகளே ஆக்கிரமிப்புகளுக்குத் துணையாக இருப்பதை மாவட்ட நிர்வாகம் முறையாக விசாரணை செய்து, ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்க வேண்டும் எனவும், உண்மையான விவசாயிகளுக்கு உரிய வழிவகை செய்து தர வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *