கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், அரசு பேருந்து விபத்து தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்ய உள்ளதாக வந்த தகவலை கண்டித்து, அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று இரவு நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், அந்த அரசு பேருந்தின் ஓட்டுநருக்கு தவறு இல்லை என கூறப்பட்ட போதிலும், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படலாம் என்ற தகவல் வெளியானது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நகரின் முக்கிய இடங்களில் அரசு பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தி வைத்து, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் நாகர்கோவில் நகரம் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பணிக்கு செல்லும் அலுவலக ஊழியர்கள், பள்ளி–கல்லூரி மாணவர்கள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் உள்ளிட்ட பயணிகள் கடும் அவதிக்குள்ளானனர்.
பல வழித்தடங்களில் பேருந்து சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு, உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும், ஓட்டுநருக்கு நியாயம் வழங்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பேருந்து சேவைகள் படிப்படியாக இயல்புநிலைக்கு திரும்பின. நகரில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் மெதுவாக குறைந்தது.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன்: ஜெனீருடன்
குமரி மாவட்ட தலைமை நிருபர்: பாவலர் ரியாஸ்.
