தேனி மாவட்டம், அரண்மனை புதூர் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் திண்டுக்கல் மாவட்ட தடையவியல் துறையில் கைரேகை நிபுணராகப் பணிபுரிந்து வந்தார். அண்மையில், பழனி அருகே உள்ள ஐவர் மலைப் பகுதியில் நடைபெற்ற நகை கொள்ளைச் சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக விக்னேஷ் பழனிக்கு வருகை தந்துள்ளார்.
விசாரணையை முடித்த பிறகு, பழனி முருகன் மலைக்கோயிலுக்குப் படிப்பாதை வழியாகச் சென்று சாமி தரிசனம் செய்ய அவர் முடிவு செய்துள்ளார். அதன்படி, விக்னேஷ் படிப்பாதை வழியாக மலைக்கோயிலை நோக்கி ஏறிச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, மலைக்கோயிலில் உள்ள முதலுதவி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு அவசர கால முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக பழனி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு விரைவாகக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரைப் பரிசோதித்த அரசு மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர்மறைந்த சார்பு ஆய்வாளர் விக்னேஷின் உடல் பிரேத பரிசோதனைக்காகப் பழனி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. தகவலறிந்து வந்த திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) ஜெயக்குமார் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் (DSP) செல்வகுமார் ஆகியோர் விக்னேஷின் உடலுக்கு மலர்வளையம் வைத்து, இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி நிகழ்வுக்குப் பிறகு, அவரது உடல் இறுதிச் சடங்கிற்காக அவரது சொந்த ஊரான தேனிக்குக் கொண்டு செல்லப்பட்டது. கடமைக்காக வந்து, திடீர் நெஞ்சுவலியால் உயிரிழந்த இளம் சார்பு ஆய்வாளரின் மரணம் அவரது குடும்பத்தினரிடமும், காவல்துறை வட்டாரத்திலும் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.
