பழனி, ஜூலை 17 : திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம், கீரனூர் பேரூராட்சியில் உள்ள பொது சுடுகாடு முறையான பராமரிப்பின்றி சமூக விரோதிகளின் கூடாரமாகவும், சுகாதார சீர்கேட்டின் இருப்பிடமாகவும் மாறியுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்தச் சுடுகாட்டில் நீண்ட நாட்களாகப் புதர்கள் அகற்றப்படாததால், காடு போல் மண்டிப் போய்க் காணப்படுகிறது. இதன் காரணமாகப் பாம்புகள் மற்றும் விஷப் பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதுமட்டுமன்றி, இப்பகுதியைச் சிலர் திறந்தவெளி கழிப்பிடமாகப் பயன்படுத்தி வருவதால், கடுமையான துர்நாற்றம் வீசுவதோடு, அப்பகுதியில் பெரும் சுகாதார சீர்கேடும், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
பகலிலேயே மக்கள் செல்ல அச்சப்படும் இந்தச் சுடுகாடு, இரவு நேரங்களில் மதுப்பிரியர்களின் புகலிடமாக மாறிவிடுகிறது. இரவு நேரத்தில் இங்கு கூடும் சமூக விரோதிகள் மது அருந்துவதோடு, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்வதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய வரும் உறவினர்கள் தங்குவதற்காகக் கட்டப்பட்ட காத்திருப்போர் கட்டிடம் தற்போது முற்றிலும் பழுதடைந்து காணப்படுகிறது. கட்டிடத்திற்கு முறையான கதவுகள் இல்லாததால், அது சமூக விரோத செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கீரனூர் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுவதாவது:
“சுடுகாட்டின் அவல நிலை குறித்துப் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தப் பயனும் இல்லை. பேரூராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, சுடுகாட்டைச் சுத்தம் செய்ய வேண்டும். பழுதடைந்த காத்திருப்போர் கூடத்தைப் புதுப்பித்து, சுடுகாட்டைச் சுற்றி வலுவான சுற்றுச்சுவர் மற்றும் கதவுகள் அமைத்துத் தர வேண்டும். பொதுமக்கள் நலன் கருதி இதற்குப் பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.
