பூண்டி, ஜூலை, 17: கொடைக்கானல் மேல்மலைப் பகுதியான பூண்டி பேருந்து நிறுத்தம் அருகே, பெண்கள் சுய உதவிக்குழுக்கள் சார்பாகச் சட்டவிரோத மது விற்பனைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட பெண்கள் திரளாகக் கலந்துகொண்டு, சட்டவிரோத மது விற்பனைக்கு எதிராகக் கண்டனக் குரல்களை எழுப்பினர்.
போராட்டம் குறித்துத் தகவல் அறிந்து வந்த கொடைக்கானல் காவல்துறை உயர் அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மேல்மலைப் பகுதியில் இனிமேல் யாராக இருந்தாலும், ‘சில்லிங்’ முறையில் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்தால் அவர்கள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் அதிகாரிகள் உறுதியளித்தனர்.
காவல்துறையின் இந்த உறுதியான வாக்குறுதியைத் தொடர்ந்து, பெண்கள் தங்களது கண்டன ஆர்ப்பாட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிட்டனர். மேலும், மீண்டும் இது போன்ற சட்டவிரோதச் செயல்கள் தொடர்ந்தால் கொடைக்கானல் அளவில் மிகப்பெரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.
சமூக நலனைக் கருத்தில் கொண்டு இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட அத்தனை நல் உள்ளங்களுக்கும், பெண்களுக்கும் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்.
இணை ஆசிரியர் : நா.ராஜாமணி – 8973350663
