கழிவுநீர் வெளியேற்றம் குறித்து புகார்; மாநகராட்சி நடவடிக்கை.
நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் சில கடைகளில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்பட்டதாக வந்த புகாரின் அடிப்படையில், மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட கடைகளுக்கு மொத்தம் ₹1 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.
புகாரைத் தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மேரி பிரின்சி லதா பேருந்து நிலையத்துக்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தார். அப்போது, சில கடைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவுநீர் பொதுச் சுகாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேயரின் அறிவுறுத்தலின் பேரில், மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, IAS உத்தரவின்படி மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து சுகாதார விதிமுறைகளை மீறியதாகக் கண்டறியப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
வடசேரி பேருந்து நிலையம் நாகர்கோவிலின் முக்கிய போக்குவரத்து மையங்களில் ஒன்றாகும். தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் இந்த வளாகத்தில் சுகாதார வசதிகள் மற்றும் கழிவுநீர் மேலாண்மை தொடர்பாக அவ்வப்போது புகார்கள் எழுந்து வருகின்றன.
பொதுமக்களின் சுகாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில், சுகாதார விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்கள் மீது தொடர்ந்து கண்காணிப்பும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.
