கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் அரசு தொடக்கப் பள்ளியில், வருகின்ற கல்வியாண்டிற்கான புதிய மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி, மாபெரும் விழிப்புணர்வுப் பேரணி இன்று (11.03.2026) மிகச் சிறப்பாக நடைபெற்றது.
அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் தரமான கல்வி மற்றும் அரசின் விலையில்லா நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்தப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. M. இராமச்சந்திரன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு. பிரேம் ஆனந்த் ஆகியோர் இந்நிகழ்விற்குத் தலைமையேற்று, விழிப்புணர்வுப் பேரணியைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.
இந்தப் பேரணியில் பள்ளி மேலாண்மைக் குழு (SMC) உறுப்பினர்கள், பள்ளியின் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் என ஏராளமானோர் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
பேரணியில் பங்கேற்ற மாணவர்கள், “அரசுப் பள்ளியே நமது பள்ளி”, “கல்வியே அழியாத செல்வம்” போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் புத்தளத்தின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பொதுமக்களிடம் சிறப்பான முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நிகழ்வில் பங்கேற்ற ஆசிரியர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள், அரசுப் பள்ளியின் கட்டமைப்பு மற்றும் சிறப்புகளைப் பொதுமக்களுக்கு எடுத்துரைத்து மாணவர் சேர்க்கையை வலியுறுத்தினர்.
ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் சிறப்பான ஒருங்கிணைப்பால் இந்த மாணவர் சேர்க்கை விழிப்புணர்வுப் பேரணி வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன் பாவலர் ரியாஸ்.
