கன்னியாகுமரி, ஏப் 10,
கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட புளியடி சுடுகாட்டுப் பகுதியிலுள்ள தென்னந்தோப்பு ஒன்றில், முதியவர் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் வெட்டூர்ணிமடம் அடுத்த கட்டையன்விளையைச் சேர்ந்த அந்தோணிமுத்து என்பவரின் மகன் தாசன் (76) என்பது உறுதி செய்யப்பட்டது.
அவர் இறந்து சுமார் மூன்று நாட்கள் ஆகியிருக்கலாம் எனத் தெரிகிறது.
சடலம் துர்நாற்றம் வீசும் அளவிற்கு மிகவும் மோசமான நிலையில் இருந்ததால், அதனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்ப மாவட்ட எஸ்.டி.பி.ஐ (SDPI) கட்சியின் மருத்துவச் சேவை அணியினரை போலீசார் உதவிக்கு அழைத்தனர்.
போலீசாரின் அழைப்பை ஏற்று உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.டி.பி.ஐ மருத்துவக் குழுவினர், அந்த முதியவரின் சடலத்தை மீட்டு தங்களது ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை பிரேதப் பரிசோதனை மையத்திற்குப் பாதுகாப்பாகக் கொண்டு சென்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வடசேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து, முதியவரின் இறப்பிற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
