Headlines

நாகர்கோவிலில் துரித நடவடிக்கை மூலம் சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டிய காவல்துறை: சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.!

நாகர்கோவிலில் துரித நடவடிக்கை மூலம் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டிய காவல்துறை: சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.!

நாகர்கோவில், மார்ச் 3:

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதிகளில், அரசியல் கட்சியினரிடையே உருவான மோதல் சூழலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் முனைவர் ஆர். ஸ்டாலின், இ.கா.ப., அவர்களின் தலைமையிலான காவல்துறை உடனடியாகச் செயல்பட்டுத் தடுத்து நிறுத்தியுள்ளது.

இந்நிலையில், நேர்மையான முறையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் குறித்துச் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் போலிச் செய்திகளுக்குப் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நடந்தது என்ன? கடந்த சில நாட்களாக நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசியல் கட்சியினரிடையே பதற்றமான சூழல் நிலவியது.

இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் உருவப் பொம்மையைக் காங்கிரஸ் கட்சியினரும், அதற்குப் பதிலடியாகக் காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களின் உருவப் பொம்மையை பாஜகவினரும் பொது இடங்களில் தொங்கவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, பொது அமைதியைக் காக்கவும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் முனைவர் ஆர். ஸ்டாலின் அவர்கள் விரைவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டார்.

காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில், கோட்டார் மற்றும் வடசேரி காவல் நிலைய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களைக் கண்டறிய, அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்புக் கருவிகளின் (CCTV) காட்சிகளைக் கைப்பற்றும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

இதன் ஒரு பகுதியாக, நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் உணவகத்திற்குச் சென்ற காவல்துறையினர், வழக்கமான விசாரணைக்காக அங்கிருந்த ஊழியர்களிடம் காணொளிப் பதிவுகளைக் கேட்டுள்ளனர்

அப்போது உணவகத்தின் உரிமையாளர் அங்கு இல்லாத காரணத்தால், காவல்துறையினர் சட்டத்திற்கு உட்பட்டு ஊழியர்களின் உதவியுடன் காணொளிப் பதிவுக் கருவியைக் (DVR) கைப்பற்றி விசாரணைக்காக எடுத்துச் சென்றனர்.

விசாரணை முடிந்ததும் அந்தக் காணொளிப் பதிவுக் கருவி குறிப்பிட்ட உணவக நிர்வாகத்திடம் திருப்பி வழங்கப்பட்டது. இதுதான் அங்கு நடந்த உண்மை நிகழ்வாகும்.

ஆனால், காவல்துறையின் இந்த நேர்மையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடைமுறையைத் திரித்து, சிறப்பாகப் பணியாற்றும் காவல் அதிகாரிகளுக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கில் சில விஷமிகள் சமூக ஊடகங்களில் அவதூறான குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருகின்றனர்.

எந்தவொரு பாரபட்சமுமின்றி, கலவரத்தைத் தடுத்துப் பொது அமைதியைக் காக்க விரைந்து செயல்பட்ட காவல்துறையினர் மீது இதுபோன்ற உண்மைக்குப் புறம்பான தகவல்கள் பரப்பப்படுவது சமூக ஆர்வலர்கள் மற்றும் நடுநிலையான பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இரவு பகலாகப் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக உழைக்கும் காவல்துறைக்கு எதிராகச் செயல்படும் இது போன்ற சமூக விரோதிகள் மற்றும் வதந்தி பரப்புவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

மேலும், கண்காணிப்புக் கருவியின் ஆதாரங்களைக் கொண்டு இதுபோன்ற அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது கைது நடவடிக்கை முடுக்கி விடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக விடியல் செய்திகளுக்காக குமரி மாவட்ட நிருபர்: பாவலர் ரியாஸ்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *