Headlines

கனரக லாரி தடைக்கு எதிர்ப்பு: நாகர்கோவிலில் குடும்பங்களுடன் உரிமையாளர்கள் முற்றுகை.

கனரக லாரி தடைக்கு எதிர்ப்பு: நாகர்கோவிலில் குடும்பங்களுடன் உரிமையாளர்கள் முற்றுகை

வாழ்வாதாரம் பாதிப்பு குற்றச்சாட்டு; அனுமதி இல்லை என்றால் தேர்தல் புறக்கணிப்பு எச்சரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிமவளங்களை ஏற்றிச் செல்லும் கனரக டாரஸ் லாரிகளுக்கு விதிக்கப்பட்ட தடை எதிர்ப்பு தீவிரமடைந்துள்ளது. நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் இணைந்து அலுவலகத்தை முற்றுகையிட்டு, தடை காரணமாக வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையிலும், வாகனங்களை மீண்டும் இயக்க அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அனுமதி வழங்கப்படவில்லை என்றால் அடுத்த கட்டமாக தேர்தலை புறக்கணிக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என போராட்டக்காரர்கள் எச்சரித்தனர். இதனிடையே, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட கனரக லாரிகள் கனிமவளங்களை ஏற்றி செல்கின்றன. குறிப்பாக நெல்லை–கன்னியாகுமரி–திருவனந்தபுரம் வழித்தடத்தில் தொடர்ச்சியான விபத்துகள் பதிவாகி வருகின்றன.

கடந்த வாரம் தக்கலை அருகே கல்லூரி மாணவி ஒருவர் டாரஸ் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, விபத்துகளை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை இணைந்து கனரக வாகனங்களுக்கு தற்காலிக தடை விதித்தது.

ஆனால், இந்த நடவடிக்கை பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சியா அல்லது வாழ்வாதாரத்தை பாதிக்கும் தீர்வா என்ற விவாதம் தற்போது அதிகரித்து வருகிறது. அதிகாரிகள் மற்றும் வாகன உரிமையாளர்கள் இடையிலான பேச்சுவார்த்தையின் முடிவே அடுத்த கட்ட நிலையை தீர்மானிக்கும் எனக் கருதப்படுகிறது.

தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *