மதுரை மாநகராட்சி கடந்த சில ஆண்டுகளாக அரசியல் தலையீடுகள், நிர்வாக குழப்பங்கள், சொத்து வரி முறைகேடு குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களால் கடுமையான நெருக்கடியை சந்தித்து வந்தது.
குறிப்பாக 2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் மட்டும் ஐந்து மாநகராட்சி ஆணையாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவம், அந்த நிர்வாகச் சிக்கல்களின் தீவிரத்தைக் காட்டும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்பட்டது.
இதன் காரணமாக மதுரை மாநகராட்சிக்கு ஆணையாளராக பொறுப்பேற்கவே சில ஐஏஎஸ் அதிகாரிகள் தயக்கம் காட்டியதாகவும் கூறப்பட்டது.
இத்தகைய சவாலான சூழ்நிலையில், 2025 பிப்ரவரி 3ஆம் தேதி மதுரை மாநகராட்சியின் முதல் பெண் ஆணையாளராக சித்ரா விஜயன் (IAS) பொறுப்பேற்றது முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.
பொறுப்பேற்ற நாள் முதல் அரசியல் அழுத்தங்கள் மற்றும் நிர்வாக சவால்களை சமநிலையுடன் கையாள்ந்து, நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தும் பணிகளில் அவர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
சொத்து வரி முறைகேடு விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை மாநகராட்சியில் வெளிப்பட்ட சொத்து வரி முறைகேடு விவகாரம் மாநிலம் முழுவதும் கவனம் பெற்றது. இந்த விவகாரத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக மேயர் இந்திராணி, ஐந்து மண்டலத் தலைவர்கள் மற்றும் இரண்டு நிலைக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோரின் பதவிகள் பறிக்கப்பட்டன.
இதனால் கடந்த சில மாதங்களாக மேயர் மற்றும் மண்டலத் தலைவர்கள் இல்லாத நிலையில் மாநகராட்சி நிர்வாகம் ஆணையரின் தலைமையில் செயல்பட்டு வரும் அபூர்வமான சூழல் உருவானது.
நிர்வாகத்தை நிலைநிறுத்திய உறுதியான நடவடிக்கைகள் இந்த கடினமான சூழலிலும் நகராட்சியின் தினசரி பணிகள் பாதிக்கப்படாமல் நடைபெற பல்வேறு நிர்வாக நடவடிக்கைகளை ஆணையர் சித்ரா விஜயன் (IAS)மேற்கொண்டார். நகராட்சி அலுவலகங்களில் கண்காணிப்பு முறை பலப்படுத்தப்பட்டது.
வருவாய் வசூல் செயல்முறைகள் டிஜிட்டல் முறையில் மேம்படுத்தப்பட்டதுடன், பொதுமக்கள் புகார் தீர்வு முறை விரைவுபடுத்தப்பட்டது. நகர சுத்தம், குடிநீர் விநியோகம், கழிவுநீர் மேலாண்மை போன்ற அடிப்படை சேவைகள் தடையின்றி நடைபெற அதிகாரிகளுக்கு தெளிவான பணிக்கட்டளைகள் வழங்கப்பட்டன.
பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்கள் மாநகராட்சி பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்தும் முயற்சிகள், மருத்துவ மற்றும் சுகாதாரத் துறைகளில் தீவிர கண்காணிப்பு, நகரமைப்பு திட்டங்களில் ஒழுங்குமுறை செயல்பாடு, வருவாய் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை ஆகிய பல்வேறு துறைகளில் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் மாநகராட்சி சேவைகளின் தரம் மேம்பட்டு, பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மதுரை நெல் பேட்டை பகுதியில் உள்ள தயிர் மார்கெட்டில் 50 க்கும் மேற்பட்ட பெண் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றினார்
அரசு மட்டத்தில் பாராட்டு
நிர்வாக சவால்கள் நிறைந்த சூழ்நிலையிலும் மாநகராட்சி பணிகளை தடையின்றி முன்னெடுத்து வந்ததற்காக ஆணையர் சித்ரா விஜயனின் (IAS)பணிக்கு அரசு உயர் மட்டத்திலும் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன.
அரசியல் அழுத்தங்கள் மற்றும் நிர்வாக சிக்கல்களை திறம்பட கையாளும் அவரது செயல்முறை, அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
வரலாற்றில் புதிய அத்தியாயம் அரசியல் மற்றும் நிர்வாக சோதனைகள் நிறைந்த காலகட்டத்தில் உறுதியான நிர்வாக முத்திரையை பதித்து, சவால்களை சாதனைகளாக மாற்றிய ஆணையர் சித்ரா விஜயனின் ( IAS) பணியாற்றும் முறை, மதுரை மாநகராட்சி நிர்வாக வரலாற்றில் ஒரு முக்கியமான புதிய அத்தியாயமாக பார்க்கப்படுகிறது.
மதுரை மாவட்ட செய்தியாளர்: சின்னத்தம்பி
