திருநெல்வேலி,டிச.5:-
திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், திசையன் விளை தாலுகா, கோட்டைக்கருங்குளம் பகுதியில் அமைந்துள்ள, “நம்பி ஆறு” அணையில் இருந்து, நடப்பு “பிசானம்” (PISANAM) பருவ சாகுபடிக்காக, தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் ( சபாநாயகர்) மு. அப்பாவு, இன்று ( டிசம்பர்.5) காலையில், சிறப்பு பூஜைகளுக்கு பின்னர், தண்ணீர் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், “அடுத்த ஆண்டு (2026) மார்ச் மாதம் 31- ஆம் தேதி முடிய மொத்தம் 117 நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 60 கனஅடி வீதம், திறந்து விடப்படும் இந்த தண்ணீரால், நம்பி ஆறு வலதுபுற கால்வாய் மூலம் 14 குளங்களுக்கும், இடதுபுற கால்வாய் மூலம் 26 குளங்களுக்கும் என, மொத்தம் 40 பாசன குளங்களுக்கு தண்ணீர் கிடைக்கும்.

இதன் மூலம் மொத்தம் 1744 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்!- என்று குறிப்பிட்டார். “விவசாயிகள், மற்ற தேவைகளுக்கு இந்த தண்ணீரை திருப்பி விடாமல், விவசாய தேவைகளுக்கு மட்டும், மிகவும் சிக்கனமாக பயன்படுத்தி, நீர் விநியோகப்பணியில் நீர்வளத்துறை அதிகாரிகளுடன், ஒத்துழைக்க வேண்டும்!” என்றும், சபாநாயகர் கேட்டுக் கொண்டார். இந்த தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில், நீரவளத்துறை கண்காணிப்பு பொறியாளர் (திட்டங்கள்) சிவகுமார், செயற்பறியாளர்கள் ( சிற்றாறு வடிநிலம்) மணிகண்ட ராஜன், ஆக்னஸ் ராணி, அருள் பன்னீர் செலவம், உதவி செயற்பொறியாளர் மூர்த்தி, உதவி பொறியாளர் கிருஷ்ண மூர்த்தி விக்னேஷ், கோட்டைக்கருங்குளம் ஊராட்சி மன்றத்தலைவர் முருகன் உட்பட, பலர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.
