திருநெல்வேலி, அக. 3:-
நெல்லை பாளையங்கோட்டை, அண்ணா விளையாட்டு அரங்கில், முதலமைச்சர் கோப்பைக்கான, மாநில அளவிலான மாணவிகள் ஹாக்கி போட்டியை, இன்று (அக்டோபர். 3) காலையில், தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் (சபாநாயகர்) மு. அப்பாவு, துவக்கி வைத்தார்.
துவக்க விழா நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், தலைமை வகித்தார்.
திருநெல்வேலி நாடாளுமன்ற உறப்பினர் வழக்கறிஞர் சி. ராபர்ட் புரூஸ், நெல்லை மாநகராட்சி மேயர் கோ. ராமகிருஷ்ணன், துணை மேயர் கே. ஆர். ராஜூ ஆகியோர், முன்னிலை வகித்தனர்.
முன்னதாக, இந்த நிகழ்ச்சியில், சபாநாயகர் பேசியதாவது:- “மு.க.ஸ்டாலின், முதலமைச்சராக பொறப்பேற்றதற்கு பிறகு, விளையாட்டுத் துறையில் மாணவ, மாணவிகள் மட்டுமல்ல அரசுப்பணியாளர்கள், பொதுமக்கள் என, அனைத்துத் தரப்பினரும் பங்கு பெற வேண்டும் என்பதற்காக, மாவட்ட அளவில், மாநில அளவில், முதலமைச்சர் கோப்பைக்கான, 27 வகையான விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்து, இதில் 57 பிரிவு விளையாட்டுகளை ஆண்களுக்கு, பெண்களுக்கு ன, தனித்தனியாக நடத்தச் செய்துள்ளார்.

முதலமைச்சர் கோப்பைக்கான இந்த மாநில அளவிலான விளையாட்டுப் போடடிகள், மொத்தம் 11மாவட்டங்களில் நடைபெற்று வருகின்றன.
திருநெல்வேலி மாவட்டத்தைப் பொறுத்தவரை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் பங்கேற்பதற்கான, ஹாக்கி போட்டிகளுக்காக, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் பள்ளி மாணவிகளுக்கான போட்டிகள், இன்று (அக்டோபர். 3) முதல், 7-ஆம் தேதி வரை மொத்தம் 5 நாட்கள் நடைபெறும்.
மறுநாள் 8-ஆம் தேதி முதல்,12-ஆம் தேதி வரை மொத்தம் 5 நாட்கள், கல்லூரி மாணவிகளுக்கான போட்டிகள் நடைபெறும். மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், அதாவது தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் இருந்தும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் என மொத்தம் 1,500 மாணவிகள் பங்கேற்கின்றனர்.
போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து மாணவிகளுக்கும், விளையாட்டு சீருடைகள், உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து செலவு ஆகியவற்றை, தமிழக அரசே ஏற்றுக்கொண்டுள்ளது.
இப்போட்டியில் முதல் நிலைகளில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக 75 ஆயிரம் ரூபாயும், 2-வது பரிசாக 50ஆயிரம் ரூபாயும், 3-வது பரிசாக 25 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்படுகிறது.
வெற்றி பெறும் அணியில் உள்ள, அனைத்து வீராங்கனைகளுக்கும்மொத்தம் 54 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையுடன், சான்றிதழ் மற்றும் பதக்கங்களும் வழங்கப்படுகின்றன.
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளுக்கு, பரிசுத்தொகையாக மட்டும் மொத்தம் 37 கோடி ரூபாய் நிதியினை, தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இப்போட்டிகளில் வழங்கப்படும் சான்றிதழ்கள் மூலம், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில், முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
மேலும் அரசு வேலைவாய்ப்பில், 3 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. காவல்துறை, தீயணைப்புத்துறை, வனத்துறை போன்ற சீருடைப்பணியாளர்கள் பணி நியமனத்தில், முன்னுரிமை வழங்கப்படுகிறது!
இவ்வாறு, சபாநாயகர் அப்பாவு பேசினார். இன்றைய துவக்கவிழா நிகழ்ச்சியில், மாவடட வருவாய் அலுவலர் மா. சுகன்யா, நாடாளுமன்ற மேலவை முன்னாள் உறுப்பினர் விஜிலா சத்தியானந்த், மாவட்ட விளையாட்டு அலுவலர் கிருஷ்ண சக்கரவர்த்தி உட்பட, பலர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் – “மேலப்பாளையம்” ஹஸன்
