திருநெல்வேலி,நவ.16:-
தென்னக ரயில்வேயின் துணை பொதுமேலாளர் விபின் குமார், இன்று ( நவம்பர். 16) காலையில், மதுரை முதல் திருநெல்வேலி வரையிலான ரயில் பாதைகளையும், அவற்றின் இயக்கங்கள் மற்றும் பராமரிப்பு பணிகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
அத்துடன், நெல்லை சந்திப்பு ரயில்நிலையத்தில் நடைபெற்று வரும், ஆறாவது பிளாட்பாரம் நீட்டிப்பு பணிகள், புதிய நடைபாதைகளின் அமைப்பு பணிகள், ஏற்கனவே உள்ள நடைபாதைகளின் சீரமைப்பு பணிகள் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.

அதன் பின்னர் சாதாரண முறையில் செய்தியாளர்களிடம் பேசிய, தென்னக ரயில்வேயின் துணை பொது மேலாளர், ” திருநெல்வேலி ரயில் நிலைய பணிகள் அனைத்தும், திருப்திகரமாக உள்ளன.
மதுரை கோட்டத்திலேயே, அதிக வருமானம் தரக்கூடிய ஒரே ஒரு ரயில் நிலையம், திருநெல்வேலி ரயில் நிலையம் தான். இந்த நிலையத்தில் இருந்து, ஆண்டு ஒன்றுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் வருகிறது.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தை, சர்வதேச தரத்திற்கு தரம் உயர்த்துவதற்காக, “அமரித் பாரத்” (AMRIT BHARAT) திட்டத்தின் கீழ், 98 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியைக்கொண்டு, ரயில் நிலைய முகப்பு வாசல் சீரமைக்கப்பட்டு, மேம்படுத்தப்படும்.
மேற்கு வாசலில் பாதை ஒன்று புதிதாக உருவாக்கப்படும். மேற்கு மற்றும் கிழக்கு முனைகளை இணைக்கும் வகையில், புதிய உயரமான பாதை அமைக்கப்படும. 4 சக்கர வாகனங்களுக்கென தரை தளத்துடன் கூடிய, 2 மாடிகள் வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தப்படும்.
இதுபோல 2 சக்கர வாகனங்களுக்காக தரை தளத்தடன் கூடிய, 3 மாடிகள் வாகன நிறுத்துமிடம் உருவாக்கப்படும். இன்னும் பல்வேறு மேம்பாட்டு பணிகள், நிறைவேற்றப்டும்.
மதுரை கோட்டத்தில் எந்தவொரு இடத்திலும், ஆள் இல்லாத ரயில்வே கிராசிங்கள் இல்லை. எல்லா இடங்களிலும் ஊழியர்கள் உள்ளனர்.
இவ்வாறு ஊழியர்கள் உள்ள இடங்களில், இண்டர்லாக் சிஸ்டம் கொண்டு வரப்படும். 6 மற்றும் 7- வது நடைமேடைகளில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகள் வருகிற {2026} மார்ச் மாதம் இறுதிக்குள் முடிக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்!”
இவ்வாறு, தென்னக ரயில்வேயின் துணை பொது மேலாளர் விபின் குமார் (VIPIN KUMAR) திருநெல்வேலி யில் செய்தியாளர்களிடம், தெரிவித்தார். அப்போது, தெற்கு ரயில்வேயின் சிவில் பிரிவு பொது மேலாளர் சங்கர், மதுரை ரயில்வே கோட்ட உதவி மேலாளர் ராவ், வணிக மேலாளர் கணேஷ், நெல்லை சந்திப்பு ரயில் நிலைய மேலாளர் பிரேம்சந்த், போக்குவரத்து ஆய்வாளர் முருகேசன் ஆகியோர், உடனிருந்தனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர்: “மேலப்பாளையம்” ஹஸன்.
