உடுமலை
நவம்பர் 15.
உடுமலையில் சேதம் அடைந்த உழவர் சந்தையின் தரைத்தளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடுமலை கபூர் கான் வீதியில் உழவர் சந்தை அமைந்துள்ளது.இதில் 150 க்கு மேற்பட்ட விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளையும் காய்கறிகளை குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
உழவர் சந்தைக்கு உடுமலை சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் பயிரிடப்படும் சின்ன வெங்காயம், கத்திரிக்காய், வெண்டைக்காய், தக்காளி, பீட்ரூட் ,பாகற்காய், புடலங்காய் ,சுரைக்காய், மற்றும் கீரை வகைகள் உள்ளிட்டவற்றை நாள்தோறும் உழவர் சந்தை வந்து பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர்.
மழைக்காலங்களில் உழவர் சந்தையை பயன்படுத்துவதில் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன குறிப்பாக மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி வருகிறது.
மழை நீர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உழவர் சந்தையின் தரைத்தளம் மிகுந்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. குண்டும் குழியுமாக தார் சாலை பெயர்ந்து இருப்பதால் பொதுமக்கள் நடப்பதற்கு மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் அதேபோல் விவசாயிகளும் காய்கறிகளை எடுத்து வந்து கடைக்கு சேர்ப்பதற்கு சிரமப்படுகின்றனர்.

மேலும் மழைக்காலங்களில் உழவர் சந்தைக்கு முன்பாக கபூர் கான் வீதி முழுவதும் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி கடைகளில் இருக்கும் வியாபாரிகள் சந்தைக்கு வரும் பொதுமக்கள் கொசு தொல்லைக்கு ஆளாகின்றனர் டெங்கு தடுப்பு ஒழிப்பு நடவடிக்கையாக வெளியே தேங்கி நிற்கும் மழை நீரை நகராட்சி நிர்வாகம் அவ்வப்போது மோட்டார் கொண்டு உறிஞ்சி வெளியேற்றினாலும் உட்பகுதியில் சேதமடைந்த தரைதளத்தை உடனடியாக போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என பொதுமக்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
