உடுமலை அக்டோபர் 31.
உடுமலை:காட்டுப்பன்றிகள் தாக்குதலில், இருந்து பயிர்களை காப்பற்ற, சேலை கட்டுவதற்கு மட்டும், ஏக்கருக்கு, 5 ஆயிரம் ரூபாய் கூடுதலாக செலவிட வேண்டியுள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.உடுமலை அருகே வனப்பகுதியிலிருந்து வெளியேறி, கிராமங்களில், காட்டுப்பன்றிகள் கூட்டம் முகாமிட்டுள்ளன. அனைத்து வகையான சாகுபடிகளிலும், காட்டுப்பன்றிகளால், சேதம் ஏற்பட்டு வருகிறது.
அறுவடைக்கு தயாராகும் போது, ஏற்படும் சேதத்தால், பொருளாதார சேதத்தை விவசாயிகள் சந்திக்கின்றனர். குறிப்பாக, மக்காச்சோளம், சோளம், நிலக்கடலை சாகுபடியில், அதிக சேதம் ஏற்படுகிறது. காட்டுப்பன்றிகளை விரட்ட இரவு நேரங்களில், விழித்திருந்து கண்காணிக்கின்றனர்.மேலும், வரப்புகளில், வண்ண சேலைகளை கட்டுவதால், காட்டுப்பன்றிகள் கூட்டம் திசை மாறி செல்லும் என நம்பிக்கை உள்ளது.வண்ண சேலைக்கு செலவுவிதை, களையெடுத்தல், மருந்து தெளித்தல், தண்ணீர் பாய்ச்சுதல் உட்பட சாகுபடி செலவுகளோடு, காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தும், கூடுதல் செலவும் சேர்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அதன்படி, ஒரு ஏக்கர் பரப்பிலான விளைநிலத்தின் வரப்பு முழுவதும், வண்ண சேலைகள் கட்ட, ௫ ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. இதனால், காட்டுப்பன்றிகள் முழுமையாக திசைமாறி செல்கிறதா என்பது கேள்விக்குறியாக இருந்தாலும், வேறு வழியில்லாமல், செலவிட்டு வருகின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது: மக்காச்சோள சாகுபடியில், படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த, போராடி வருகிறோம். தற்போது காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வழியின்றி திணறி வருகிறோம். அறுவடைக்கு தயாராக உள்ள விளைநிலங்களில், காட்டுப்பன்றிகள் கூட்டம், கடந்து சென்றாலே, பயிர்கள் சேதமாகிறது. இதற்காக, சேலைகளை வாங்கி வந்து கட்டுகிறோம். இரவு முழுவதும் ஆட்கள் நியமித்து சுழற்சி முறையில், காவலில் ஈடுபடுகிறோம். இவ்வாறு, தெரிவித்தனர்.
