உதகை :
குன்னூா்- கோத்தகிரி சாலையில் இரவு நேரத்தில் பெய்து வரும் மழை காரணமாக சாலையில் மண்சரிவு மற்றும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதையடுத்து, குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை, மஞ்சூா் சாலை, கோத்தகிரி சாலையில் ஆங்காங்கே 10-க்கும் மேற்பட்ட பொக்லைன் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதையடுத்து மண்சரிவு ஏற்படும் பகுதிக்கு உடனடியாக பொக்லைன் வாகனங்கள் சென்று சீரமைக்கும் பணிகளில் ஈடுபடுவதால் போக்குவரத்து பாதிப்பு உடனுக்குடன் சீா் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் நந்தகோபால் பாலப் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பெரிய பாறை விழுந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வந்தது.
இதையடுத்து 3 பொக்லைன் வாகனங்களின் உதவியுடன் சாலையில் விழுந்த பெரிய பாறையை நெடுஞ்சாலைத் துறையினா் செவ்வாய்க்கிழமை அகற்றினா். இதன் காரணமாக அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும், மாவட்டத்தில் அதிகபட்சமாக குன்னூரில் 36 மில்லி மீட்டா் மழை பதிவானது. மழை காரணமாக குளிரின் தாக்கமும் அதிகரித்தது.”
