திருநெல்வேலி,அக்.12:-
திருநெல்வேலி மாவட்டத்தில், தேசிய தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டத்தின் கீழ்,1 லட்சத்து 33 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறும் வகையில், மொத்தம் 964 முகாம்களில், சொட்டு மருந்து வழங்கப்பட்டன! பாளையங் கோட்டையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர், இந்த முகாமினை, துவக்கி வைத்தனர்.
தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் இந்தியாவில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக, நடைபெற்று வருகின்றன. இதன் விளைவாக, நம்நாட்டில் கடந்த 14 ஆண்டுகளாக, போலியோ நோயின் தாக்கம் இல்லாத நிலை உள்ளது. இனி வரக்கூடிய காலங்களிலும், இதே நிலை நீடிக்க வேண்டும்! என்பதற்காக, இன்று (அக்டோபர்.12) நாடுமுழுவதும் ஒரே தவணையாக, போலியோ சொட்டு மருந்து வழங்கும் “சிறப்பு முகாம்கள்” நடைபெற்றன.
திருநெல்வேலி மாவட்டத்தில், கிராமப்புற, நகர்ப்புற பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், வேறு மாநிலங்கள், மாவட்டங்கள், ஊர்களில் இருந்து இடம் பெயர்ந்து வந்து, கட்டிடத்தொழில்கள், செங்கல் சூளை தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளோர் வாழும் இடங்கள், புறவழிச்சாலைகளில் சுங்கச்சாவடிகளில் பணிபுரிவோர் வசிக்கும் இடங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவ மனைகள் என, மொத்தம் 964 இடங்களில், இன்று (அக்டோபர்.12) போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம்கள், நடைபெற்றன.
இந்த முகாம்களில், மருத்துவத்துறை ஊழியர்கள், செவிலியர் கல்லூரி மாணவிகள், சத்துணவு பணியாளர்கள், அரசுசாரா தன்னார்வ தொண்டு நிறுவன சமூக ஆர்வலர்கள் என, மொத்தம் 4 ஆயிரத்து 109 பேர், ஈடுபடுத்தப்பட்டனர். இந்த முகாம்களின் மூலம், இம்மாவட்டத்தில், 5 வயதுக்கு உட்பட்ட, 1 லட்சத்து 33 ஆயிரம் குழந்தைகள், பயன்பெறுவார்கள். விடுபட்ட குழந்தைகளுக்கு, இனிவரக்கூடிய 7 நாட்களிலும், சுகாதார பணியாளர்கள், வீடு- வீடாக வந்து, போலியோ சொட்டு மருந்தினை வழங்குவார்கள். பாளையங்கோட்டை ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்தில் உள்ள, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற முகாமில், தலா ஒரு குழந்தைக்கு சொட்டு மருந்தினை வழங்கி, இந்த முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு. அப்துல் வகாப் ஆகியோர், துவக்கி வைத்தனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.
