திருநெல்வேலி, செப். 29:-
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும், திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், இன்று (செப்டம்பர். 29) வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

இதில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். இரா. சுகுமார் பங்கேற்று, மனுதாரர்கள் இருந்த இடத்திற்கே சென்று, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை, நேரடியாக பெற்றுக் கொண்டார். பொதுவான மனுக்கள் மீது மட்டுமல்லாமல், முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு வந்துள்ள மனுக்கள் மீதும், தனிக்கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு, தொடர்புடைய அலுவலர்களுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
இந்த கூட்டத்தின் போது, “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட சிறப்பு முகாமில் மனு கொடுத்து, நலத்திட்ட உதவி கோரிய மாற்றுத் திறனாளி ஒருவருக்கு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, 1லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, பேட்டரி பொருத்திய வீல் சேரையும், இன்னொரு மாற்றுத்திறனாளிக்கு 13 ஆயிரத்து 500 மதிப்பிலான மடக்கு சக்கர நாற்காலியையும், மாவட்ட வருவாய்த்துறை சார்பாக, மேலச்செவல் கிராமத்தை சேர்ந்த, நலிவுற்ற பெண் கஸ்தூரி என்பவருக்கு, இலவச வீட்டு மனைப்பட்டாவையும், அவருடைய மகனுக்கு பள்ளிப்படிப்பை தொடர, மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியிலிருந்து 10ஆயிரம் ரூபாய்க்கான காசோலையினையும், மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

இதுதவிர, “சென்னை குழந்தைகள் அறக்கட்டளை” சார்பாக, நெல்லை மாவட்ட அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்களை, அங்கன்வாடி பொறுப்பாளர்களிடம், அவர் ஒப்படைத்தார்.இந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, மாவட்ட சமூக பாதுகாப்புத்திட்ட தனி துணை ஆட்சியர் ஜெயா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் ராஜசெல்வி, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் தனலட்சுமி ஆகியோர் உட்பட, துறை சார்ந்த அலுவலர்கள் பலரும், பங்கேற்றிருந்தனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.
