திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள ராஜ்கமல் சினிமேக்ஸ் திரையரங்கில் தற்போது திரையிடப்பட்டு வரும் கிங்டம் (Kingdom) திரைப்படம் தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளில், தொப்புள்கொடி உறவாகும் ஈழச் சொந்தங்களின் வாழ்க்கை வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, நாம் தமிழர் கட்சி ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் கதிர் மற்றும் அவரது குழுவினர் திரையரங்க மேலாளரிடம் நேரில் சென்று மனு வழங்கினர்.
இதில், ஈழத்தமிழர்கள் குறித்து தவறான தகவல்களை பரப்பும் இந்த படத்தினை தடை செய்ய வேண்டும் என்றும், தமிழர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து திரையரங்க மேலாளர், மனுவை உயரதிகாரிகளிடம் கொண்டுசெல்லுவதாகவும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து, நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் அமைதியாக அங்கிருந்து வெளியேறினர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
