திருநெல்வேலி,டிச.6:-
கடந்த 1992- ஆம் ஆண்டு இதே நாளில் (டிசம்பர்.6) இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தலமான பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது. அவ்வாறு இடிக்கப்பட்டு, 33 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் கூட, முஸ்லிம் மக்கள் ஆண்டு தோறும், இந்நாளில் தங்களுடைய கண்டனத்தை, வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதன் அடிப்படையில், பாபரி மஸ்ஜித் இடிப்பு தினமான இன்று (டிசம்பர்.6) இந்நாள் கருப்பு தினமாகவும், பாசிச எதிர்ப்பு தினமாகவும், திருநெல்வேலி மேலப்பாளையத்தில், அனுஷ்டிக்கப்பட்டது. எஸ்டிபிஐ கட்சியின், திருநெல்வேலி மாநகர் மாவட்டம் சார்பாக, மேலப்பாளையம் சந்தை ரவுண்டானாவில், இன்று {டிசம்பர்.6} காலையில், எஸ்டிபிஐ கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் “கோட்டூர்” பீர் மஸ்தான் தலைமையில், மாபெரும் மக்கள் திரள், “கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட பொதுச் செயலாளர் அன்வர் ஷா, அனைவரையும் வரவேற்று,பேசினார். பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி செயலாளர் மின்னத்துல்லா, நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். மாவட்ட, தொகுதி அமைப்புகளின் நிர்வாகிகள், முன்னிலை வகித்தனர்.
“சிறப்பு அழைப்பாளர்கள்” ஆக, கலந்துகொண்ட நெல்லை மாநகர் மாவட்ட துணை தலைவர் சாகுல் அமீது உஸ்மானி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நெல்லை மண்டல துணை தலைவர் “கரிசல்” சுரேஷ், எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரியாஸ் அகமது ஆகியோர், கோரிக்கைகளை வலியுறுத்தி, உரை நிகழ்த்தினர்.

எஸ்டிபிஐ கட்சியின், மாநில பேச்சாளர் அப்துல் ஜமீல், தம்முடைய “கண்டன” உரையில், “1992- ஆம் ஆண்டு இதே நாளில், (டிசம்பர்.6) அயோத்தியில் நிகழ்ந்த “பாபரி மஸ்ஜித் தகர்ப்பு” என்பது வெறும் கட்டட இடிப்பு மட்டுமல்ல.அது, அண்ணல் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின், ஆன்மாவையே தாக்கிய, பயங்கரவாத செயல் ஆகும்!”- என்று,வேதனையுடன் குறிப்பிட்டார்.
ஆர்ப்பாட்டத்தில், பெண்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, “பாதுகாப்போம்! பாதுகாப்போம்! வழிபாட்டு உரிமைகளை பாதுகாப்போம்!”- என, ஆவேசமாக முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்ட நிறைவில், பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி தலைவர் சலீம் தீன், அனைவருக்கும் நன்றி கூறினார். பாபரி மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு, மேலப்பாளையம் நகரம் முழுவதும் வியாபார கடைகள், வர்த்தக நிறுவனங்கள், பீடி உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளிட்ட, சுமார் 2 ஆயிரம் நிறுவனங்கள், மூடப்பட்டு இருந்தன.
வாடகை ஆட்டோக்கள், சரக்கு வேன்கள்,லாரிகள், டாக்ஸிகள் எதுவும் ஓடவில்லை. வங்கிகள், மருத்துவ மனைகள், அரசு அலுவலகங்கள், தனியார் மற்றும் அரசு பேருந்துகள் வழக்கம் போல இயங்கின. எப்பொழுதும் மக்கள் நடமாட்டத்தால் கலகலப்பாக இருக்கும், சந்தை ரவுண்டானா, அம்பை ரோடு, விஎஸ்டி பஜார், கொட்டிக்குளம் பஜார், அத்தியடி பஜார், டாக்ஸி ஸ்டாண்டு, பஜார் திடல், அணணா வீதி, மீன் மார்க்கெட், அரசு மருத்துவமனை வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளும், ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடந்தன. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்காக, நகரின் 10 முக்கிய இடங்களில், “பலத்த” போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் மேலப்பாளையம் ஹஸன்.
