திருப்பத்தூர் மாவட்டம் :
திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் கலீல். இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் விவசாய நிலம் ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் மத்தூர் கொல்லை பகுதியில் உள்ளது.
அங்கே ஆடு,மாடு, கோழிகளை ஆகியவை பண்ணை அமைத்து வளர்த்து வருகிறார்.
மேலும் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த ஆஸ்கர் பாஷா மனைவியை பிரிந்து கடந்த 4 ஆண்டுகளாக
பண்ணையில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நிலையில் அதே பண்ணையில் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 2 இளைஞர்களை ஆஸ்கர் பாஷா பணிக்கு அழைத்து வந்துள்ளார்.
ஆஸ்கர் பாஷா தினமும் தனது தாய், மற்றும் தந்தைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிவருவதை வழக்கமாக கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுகிழமை காலை முதல் 2 நாட்களாக அவர் குடும்பத்தினருக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளாததால் மறுநாள் அவர் பணியாற்றும் நிலத்திற்கு அவரது குடும்பத்தினர் நேரில் சென்று அவரை தேடியுள்ளனர்..
அப்போது அங்கே ஆஸ்கர் பாஷாவின் செல்போன் மற்றும் இருசக்கர வாகனம் மற்றும் அவருடன் பணியாற்றி வந்த 2 வடமாநில இளைஞர்களும் காணாமல் இருப்பதை அறிந்த குடும்பத்தினர் சம்பவம் குறித்து உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில் ஆஸ்கர் பாஷா பணியாற்றி வந்த அதே நிலத்தில் உள்ள விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் அவர் சடலமாக இருப்பதை பகுதி மக்கள் பார்த்து உமராபாத் காவல்துறையினர் மற்றும் ஆம்பூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உமராபாத் போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இருந்து உடல், முகம் பகுதியில் பலத்த காயங்களுடன் ஆஸ்கர் பாஷா உடலை மீட்டனர்.
முதற்கட்ட விசாரணையில் அவரை வடமாநில இளைஞர்கள் அடித்து கொலை செய்து, கிணற்றில் வீசிச்சென்றது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து ஆஸ்கர் பாஷா உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சம்பவம் குறித்து உமராபாத் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து, ஆஸ்கர் பாஷாவை அடித்துகொலை செய்து கிணற்றில் வீசி சென்ற சம்பவம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை தொடங்கி, தப்பியோடிய வடமாநில இளைஞர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
கொலை செய்து விட்டு சொந்த மாநிலத்துக்கு தப்பி ஓடிய வட மாநில இளைஞர்களை பிடிக்க எஸ்பி தலைமையான தனிப்படை காவல்துறையினர் உத்தர பிரதேச மாநிலத்திற்கு விரைந்து சென்று கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அனில் குமார் (25) மற்றும் அங்கீத் (17) ஆகிய இருவரை கைது செய்து உமராபாத் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அஸ்கர் பாஷா தொடர்ந்து மது போதையில் அவர்களை தரக்குறைவாக பேசி வந்ததாகவும், சம்பளம் சரிவர கொடுப்பதில்லை எனவும், சம்பவத்தன்று அணில் குமார் சமைத்து பரிமாறிய உணவை ஆஸ்கர் பாஷா காலால் எட்டி உதைத்து அவமானப்படுத்தியதால் ஆத்திரமடைந்து இருவரும் அஸ்கர் பாஷாவின் கழுத்தை நெரித்து கொலை செய்து விவசாய கிணற்றில் வீசிவிட்டு அவரது இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை எடுத்துக் கொண்டு ஓசூர் வரை சென்றதாகவும் அங்கிருந்து பெங்களூர் சென்று ரயில் மூலம் சொந்த மாநிலத்திற்கு தப்பி ஓடியதாக விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இருவர் மீதும் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து ஆம்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு அணில் குமாரை சிறையில் அடைத்தனர்.
மேலும் சிறுவன் அங்கித்தை சென்னையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆம்பூர் அருகே விவசாய நிலத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்த இளைஞரை உடன் பணிபுரிந்த வட மாநில இளைஞர்கள் கழுத்தை நெரித்து கொலை செய்து விவசாய கிணற்றில் வீசி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
