தேவர்களில் ஒருவரான சந்திரன் ஐப்பசி மாத முழு நிலவு(பௌர்ணமி)நாளில் தோஷங்கள் நீங்கி முழு ஒளியைப் பெற்றார் என்பது புராண வரலாறு.அன்றைய நாளில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேக விழா நடத்தப்பட்டு வருகிறது. அன்னாபிஷேக அலங்காரத்தில் சிவபெருமானை தரிசனம் செய்தால் அனைத்து தோஷங்களும் விலகி நன்மைகள் நடைபெறும் என்பது ஐதீகம்.இதனால் ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌர்ணமி நாளன்று சிவாலயங்களில் சிவனடியார்களால் அன்னாபிஷேக விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் உடுமலை பகுதியில் உள்ள தில்லை நகர் ரத்தினலிங்கேஸ்வரர் கோவில்,ருத்ரப்பா நகர் விசாலாட்சி அம்மன் உடனமர் பஞ்சமுகலிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது.அப்போது சிவபெருமான் மற்றும் நந்தியம் பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.அதைத் தொடர்ந்து அன்னத்தைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதையடுத்து சிவபெருமான் அன்னம், காய்கறிகள்,பழங்களுடன் கூடிய சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பக்தர்கள் சிவன் பாடல்களை பாடியும் நமசிவாய என்ற பஞ்சாட்சர மந்திரத்தை கூறியும் வழிபாடு செய்தனர்.விழாவை யொட்டி
சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்த அன்னத்தைக் கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதே போன்று உடுமலை சுற்றுப்புற கிராமங்களில் உள்ள சிவாலயங்களில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
உடுமலை : நிருபர்: மணி