வனச்சரக அலுவலர்கள் மணிகண்டன் (உடுமலை) புகழேந்தி(அமராவதி) ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உடுமலை,மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.அப்போது விவசாயிகள் கூறுகையில், வனவிலங்குகளில் குரங்கு, மயில்,காட்டுப்பன்றி உள்ளிட்டவை மலை அடிவாரம் மற்றும் சமதளப் பகுதிகளில் கூட்டம் கூட்டமாக வசித்து வருகிறது.குரங்குகள் கூட்டம் கூட்டமாக வந்து தென்னை மரங்களில் இளநீர் மற்றும் குரும்பைகள் உள்ளிட்டவற்றை பிடுங்கி கீழே போட்டு விடுகிறது. இதனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போன்று பல லட்சம் ரூபாய் கண்முன்னே இழப்பு ஏற்படுகிறது.எனவே குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப் பகுதிக்கு கொண்டு சென்று விட வேண்டும்.
இதே போன்று மயில்கள் நெற்கதிர்கள்,தானிய வகை மற்றும் பழ வகை செடிகள் சேதப்படுத்தி வருகிறது. இதனால் பல மாத உழைப்பு கைக்கு கிடைக்காமல் மண்ணோடு மண்ணாக வீணாகி விடுகிறது.இவற்றுடன் காட்டுப் பன்றிகளும் சேர்ந்து கொண்டு தோப்புகளில் தென்னை மரங்களில் இருந்து கீழே விழுகின்ற தேங்காய்கள், மக்காச்சோள பயிர்கள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தி வருகிறது.பன்றிகளின் நடமாட்டத்தை தடுக்கச் செல்லும் விவசாயிகளையும் அச்சுறுத்தி வருகிறது. இதனால் பயிர்களுக்கும் விவசாயிகளுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.எனவே குரங்கு, மயில்,காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டத்தை அடிவாரப் பகுதியிலேயே கட்டுப்படுத்த முன் வர வேண்டும்.அத்துடன் அடிவாரப் பகுதியில் வேலி அமைத்தும்,விவசாயிகளுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தி தர வேண்டும்.மேலும் வனவிலங்குகளால் சேதம் அடையும் பயிர்களுக்கு உண்டான இழப்பீட்டை கணக்கீடு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். என்று தெரிவித்தனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், வனவிலங்குகளால் சேதம் ஏற்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட வன அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பம் அளிக்கலாம்.அதன் மீது ஆய்வு மேற்கொண்டு உரிய நிவாரணம் பெற்று தரப்படும். அத்துடன் மாதம் தோறும் 5-ம் தேதி விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறும்.அதில் கலந்து கொண்டு விவசாயிகள் குறைகளை தெரிவித்து பயன் பெறலாம் என்று தெரிவித்தனர்.
உடுமலை நிருபர் : மணி