கன்னியாகுமரி | ஜனவரி 14, 2026
கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாறு 1 அணைப் பகுதியில் சமூக விரோதிகளின் அத்துமீறல்கள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயற்கை எழில் கொஞ்சும் இந்த அணைப் பகுதியை அசுத்தப்படுத்தும் நோக்கில் சிலர் செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கதாக மாறியுள்ளது.
சிற்றாறு 1 அணை வாயில் அருகே, கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு கடையல் பேரூராட்சி சார்பாக தூய்மையை வலியுறுத்தி “இங்கு குப்பைகளை கொட்டாதீர்” என்ற எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டிருந்தது.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்ட இந்த பலகையை, நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் கிழித்தெறிந்து சேதப்படுத்தியுள்ளனர்.
இதுமட்டுமின்றி, அணைப் பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் மது பிரியர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
அணைக்கட்டு பகுதிகளில் அமர்ந்து மது அருந்துவதுடன், காலி மதுபாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அங்கேயே வீசிச் செல்கின்றனர்.
இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், அப்பகுதியின் சுற்றுச்சூழலை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கடையல் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை உடனடியாக தலையிட்டு பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,
*அணைப் பகுதியில் இரவு நேரங்களில் ரோந்துப் பணியை தீவிரப்படுத்த வேண்டும்.
*பொது இடங்களில் மது அருந்துபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க வேண்டும்.
*மர்ம நபர்களின் நடமாட்டத்தைக் கண்டறிய முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும்.
போன்ற கோரிக்கைகளை எழுப்பி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் இது போன்ற சட்டவிரோத செயல்களை பேரூராட்சி நிர்வாகமும் மாவட்ட காவல் துறையினரும் தடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமன்: ஜெனீருடன், பாவலர் ரியாஸ்.
