செப் 10 கன்னியாகுமரி –
இன்று காலை குமரி மாவட்டம் பூவன்கோடு சந்திப்பில், வக்ஃப் சொத்தை போலி பத்திரம் மூலம் அபகரித்த புரோக்கர் ஷேக் முகமது மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பத்திர பதிவு அலுவலகர் கௌரிசங்கர் ஆகியோரை கண்டித்து மாபெரும் மக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாத்திற்கு சொந்தமான பூவங்கோடு பகுதியில் உள்ள 4.55 ஏக்கர் வக்ஃப் நிலம் (சர்வே எண் 171/4), லேண்ட் மாஃபியா கும்பல் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
21.08.2025 – புரோக்கர் ஷேக்முகமது, நிலத்தை தன் தாயாரின் சொத்து எனக் கூறி பத்திரம் பதிவு செய்தார்.
22.08.2025 – மறுநாளே தனிப்பட்டா மாற்றமும் செய்து கொண்டார்.
25.08.2025 – நிலத்தின் பாதியை (2.27 ஏக்கர்) புரோக்கர் டெல்பின் என்பவருக்கு விற்பனை பத்திரமாகவும், மீதியை (2.27 ஏக்கர்) புரோக்கர் ஜமாலுதீன் என்பவருக்கு பவர் பத்திரமாகவும் மாற்றினார்.
குறிப்பிடத்தக்கது என்னவென்றால், மரியம் பீவி என்பவருக்கு மொத்தம் 9 பிள்ளைகள் இருந்தும், ஷேக் முகமது தனிப்பட்ட முறையில் தானே ஒரே வாரிசு என்ற சான்றிதழை போலியாக பெற்றுள்ளார், என்பது பெரிய முறைகேடாகக் கூறப்படுகிறது.
இதன் மூலம் பல கோடி மதிப்புள்ள வக்ஃப் பைத்துல் மால் சொத்து அபகரிக்கப்பட்டது. மேலும், இதேபோன்ற போலி பத்திர மோசடிகளில் இக்கும்பல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆர்ப்பாட்டத்தை திருவிதாங்கோடு இமாம் துவக்கி வைத்தார்.
கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டு, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
திருவை ஜமாஅத் தலைவர் அன்வர் ஹுசைன், தக்கலை ஜமாஅத் தலைவர் ஜெகபர் சாதிக், எஸ்.டி.பி.ஐ மாவட்ட தலைவர் சுல்பிகர் அலி, பத்திரிக்கையாளர் சங்க தேசிய குழு உறுப்பினர் வழ. அஹமத் சாஹிப், ம.ம.க மாநில பேச்சாளர் கோவை செய்து ஆகியோர் உரையாற்றி, தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐநூறுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு தங்களது வலுவான எதிர்ப்பை தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள், தமிழ்நாடு அரசு மற்றும் வக்ஃப் வாரியம் உடனடியாக
மோசடியில் தொடர்புடைய பத்திரப்பதிவாளர் மீதும்,
லேண்ட் மாஃபியா கும்பல் உறுப்பினர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுத்து, போலி பத்திரங்களை ரத்து செய்து, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
கேமராமேன் ஜெனீருடன் குமரி மாவட்ட செய்தியாளர் : பாவலர் ரியாஸ்.
