பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமா உடுமலை நகராட்சி நிர்வாகம்.?
உடுமலை புதிய பேருந்து நிலையம் ரூ.3.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு கடந்த மே மாதம் தமிழக முதல்வரால் காணொலி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது. பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லுவதற்காக பயணிகள் பழனி கோவை தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வர் உடுமலைக்கு வருகை தந்த போது சிலை திறப்பு சம்பந்தமான பணிகளில் தொடங்கி பல்வேறு கட்ட பணிகளை செய்து முடித்த நகராட்சி நிர்வாகம் புதிய பேருந்து நிலையத்திற்கு பயணிகள் செல்ல வழித்தடத்தை ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அதன்படி செய்யாததால் கடுமையான விமர்சனத்திற்கு ஆளானது.

உடுமலை நகராட்சியில், நகர்மன்ற தலைவர் மத்தீன் தலைமையில் நடைபெற்ற நகரமன்ற கூட்டத்தில் பயணிகள் புதிய பேருந்துநிலையத்திற்கு நடந்து செல்ல இணைப்பு வழிக்கான ஏற்பாடுகளை ஏன் செய்யவில்லை? இதனால் பொதுமக்கள் பலர் அவதிக்குள்ளாகி வருவதாகவும், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்துகள் நடக்க வாய்ப்பு உள்ளதாகவும் உறுப்பினர்கள் தரப்பில் பேசப்பட்டது. மேலும், புதிய பேருந்துநிலையத்தில் பயணிகள் அமர்வதற்கு போதுமான வசதிகளை இப்போதுவரை நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்யாததால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

குறிப்பாக வயதானவர்கள் பேருந்து வரும் வரை அதிக நேரம் கால்கடுக்க நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை விரைந்து செய்துதர பலர் கோரிக்கை வைத்துள்ளனர். விபத்துகள் நடக்கும் முன்பு நகராட்சி நிர்வாகம் தரப்பில் புதிய பேருந்துநிலையம் செல்ல இணைப்பு வழியை அமைக்க துரித நடவடிக்கை எடுத்து, விரைந்து பணிகளை துவங்க வேண்டும் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.
