திருநெல்வேலி, ஜூன்.16:- அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், திங்கட்கிழமை தோறும் நடைபெறும் வாராந்திர “மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்”, இன்று [ஜூன்.16] திருநெல்வேலியிலும் நடைபெற்றது. இங்குள்ள கொக்கிரகுளம் பகுதியிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற, இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.சுகுமார் தலைமை வகித்து, மாவட்டம் முழுவதிலுமிருந்து, இந்த கூட்டத்திற்கு வந்திருந்த பொதுமக்களிடமிருந்து, குடிநீர், சுகாதாரம், தெருவிளக்கு, பேருந்து, சமுதாயக்கூடம், ஓய்வூதியம், இலவச வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பான மனுக்களை, நேரடியாக பெற்றார்.

அந்த மனுக்களை, சம்பந்தப்பட்ட துறைகளின் முதன்மை அலுவலர்களிடம் ஒப்படைத்து, அவற்றை முறையாக பரிசீலித்து, அவற்றின் மீது,விரைந்து உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு, அறிவுறுத்தினார். ஊராட்சி அளவில், கூட்டமைப்பு பிரிவில், சிறந்த கூட்டமைப்பாக செயல்பட்டதற்காக, தமிழக அரசிடமிருந்து கேடயம், 3 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு, பாராட்டு சான்றிதழ் ஆகியவற்றை ஒருசேர பெற்ற, ராதாபுரம் ஊராட்சி கூட்டமைப்பினரும், சிறந்த மகளிர் குழுவினருக்காக, தமிழக அரசின் “மணிமேகலை விருது” பெற்றுள்ள வள்ளியூர் பழவூர் ஆப்பிள் மகளிர் குழுவினரும், தாங்கள் பெற்றுள்ள அனைத்தையும், மாவட்ட ஆட்சிதலைவர் டாக்டர் இரா.சுகுமாரிடம் நேரில் காண்பித்து, வாழ்த்தும்- பாராட்டும் பெற்றனர். இந்த கூட்டத்தில், அம்பாசமுத்திரம் வட்டம், வெள்ளாங்குளி கிராமத்தை சேர்ந்த மாற்றுதிறனாளி ஆறுமுகத்துக்கு, மூன்று சக்கர வாகனத்தை, மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். பின்னர் மாவட்ட ஆட்சியர் தலைமையில், அனைவரும் கொடுஞ்செயல்கள் எதிர்ப்பு தின “உறுதிமொழி” எடுத்துக் கொண்டனர். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, உதவி ஆட்சியர் [பயிற்சி] தவ லேந்து, மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் இலக்குவன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் ஜெயா உட்பட பலரும், பங்கேற்றிருந்தனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.
