பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணி மஞ்சப்பைகளை பயன்படுத்தும் நோக்கில் தமிழக முதல்வர் கடந்த 2021ம் ஆண்டு மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து அரசு பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது.
மதுரையில் உள்ள அல் அமீன் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் நூருல்லாஹ், அரசு தொடங்கிய இந்த திட்டத்தை தற்போது வரை பள்ளி மாணவ மாணவிகள் நடைபாதை வியாபாரிகள் ரேஷன் கடை உழவர் சந்தை ஆகிய இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தும், மக்களுக்கு இலவசமாக இதுவரை 5000க்கு மேற்பட்ட மஞ்சப்பைகளையும் வழங்கியுள்ளார். இவருக்கு ஒத்துழைப்பாக வக்பு வாரிய கல்லூரியின் அலுவலக ஊழியர் சேக்மஸ்தான் மற்றும் ஸ்ரீ செல்வ பிரபு ஏஜென்சிஸ் செந்தில்குமார் உள்ளனர்.
மதுரை மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில், இவர் நண்பர்களுடன் வைகை ஆற்றில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தி அங்குள்ள மக்களுக்கு விழிப்புணர்வு செய்ததின் விளைவாக மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவர்களிடம் நெகிழி பாதிப்பினை விளக்கியும், அதனால் ஏற்படும் விளைவுகளை எடுத்துக் கூறியும், அதை தங்களின் வீடுகளில் பின்பற்றும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கியும் வருகிறார். மணமக்களுக்கு மஞ்சப்பை வழங்கி அவர்கள் மூலமாக திருமணத்திற்கு வந்தவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். அதேபோல் குறிப்பாக மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா, முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு, பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா, ஞானசம்பந்தம் ஆகியோருக்கு மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
இவர் விழிப்புணர்வு ஏற்படுத்திய பிறகு, மக்களிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ரேஷன் கடைகளுக்கு வரும் மக்கள் தற்போது பிளாஸ்டிக் கொண்டு வருவதை குறைத்து விட்டனர். உழவர் சந்தைகளுக்கு வரும் பொதுமக்கள் பெரும்பாலும் துணிப்பை கொண்டு வந்து காய்கறிகளை வாங்கி செல்வது விழிப்புணர்வு கிடைத்த வெற்றியாக கருதுகிறார். மேலும் நடை பாதை வியாபாரிகளிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தியதால், அவர்களில் சிலர் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து வருகிறார்கள்.
இயற்கையை நாம் பாதுகாத்தால் இயற்கை நம்மை பாதுகாக்கும் எனவே அனைவரும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தவிர்த்து இயற்கையை பாதுகாக்க முன்வர வேண்டும்
மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
